சென்னை: கீழடியில் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வுகளை அங்கீகரிக்காதது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய கலாசார அமைச்சர் ஷெகாவத் செய்தியாளர்களிடம் பேசும்போது, கீழடி ஆய்வு குறித்து அறிவியல்பூர்வமான ஆய்வு முடிவுகள் வந்த பிறகே அதை அங்கீகரிக்க முடியும் என்றார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வு நடவடிக்கைகளின் மூலம் தமிழர்கள், தமிழ் மொழி குறித்து அரிய தகவல்கள், தமிழர்களின் நாகரிகத்தை வெளிப்படுத்தும் அரிய தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.
குறிப்பாக, கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கிடைத்த பொருள்கள் தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் உள்ளன.
எனவே, அவை அனைத்தும் கீழடியில் உள்ள அரும்பொருளகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும் இதை ஏற்க இயலாது என்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட கீழடி ஆய்வறிக்கை அண்மையில் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. இதனால் மத்திய அரசு கடும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஷெகாவத்திடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
தொடர்புடைய செய்திகள்
அதற்கு, “கீழடி ஆய்வு தொடர்பான அறிவியல்பூர்வ ஆய்வுகள் நடைபெறும். அவற்றின் முடிவுகள் வந்தபிறகே கீழடி ஆய்வறிக்கைக்கு அங்கீகாரம் வழங்க முடியும். இதுதான் நடைமுறை,” என்றார் ஷெகாவத்.
ஆனால், அயோத்தியில் நடைபெற்ற ஆய்வை மட்டும் மத்திய அரசு உடனடியாக எப்படி ஏற்றுக்கொண்டது என்று வரலாற்றுப் பேராசிரியர்களும் தமிழ் ஆய்வாளர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் கூறுவது உண்மையை மூடி மறைக்கும் செயலாக அமைந்துள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கூறியுள்ளார்.
“அடுத்தடுத்து கண்டெடுக்கப்படும் பொருள்கள் கீழடியின் தொன்மையை வெளிப்படுத்தும். தமிழகத்தின் தொன்மையைக் கீழடி மட்டுமல்ல, கொடுமணல், ஆதிச்சநல்லூர் எனப் பல இடங்கள் உறுதிப்படுத்துகின்றன. அவர்களுக்குத் தமிழின் தொன்மையை ஏற்றுக்கொள்வதில் மனத்தடை இருக்கிறது,” என்று ரவிக்குமார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.