கரூர்: விஜய்யின் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்கு திடல் போன்ற பகுதியை தமிழக வெற்றிக் கழகத்தினர் கேட்காதது ஏன் என்று கரூர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) இரவு கரூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
அந்தச் சம்பவம் தொடர்பான வழக்கைப் பதிவு செய்த காவல்துறையினர், முதல்கட்டமாக தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன், மாநகர நிர்வாகி மாசி பொன்ராஜ் ஆகியோரைக் கைது செய்தனர்.
கூட்ட நெரிசலில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பரத் குமார் அமர்வில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) காலை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் தமது வாதத்தில், “தவெகவினர் அனுமதி கேட்ட லைட்ஹவுஸ் பகுதியில் சிலைகள், பெட்ரோல் நிலையம், ஆற்றுப் பாலம் இருப்பதால் அனுமதி வழங்கவில்லை.
“தவெக பொதுச் செயலாளர் ஆனந்தின் ஒப்புதலுடன், தவெக நிர்வாகிகளை அழைத்துச் சென்று இடத்தை காட்டிய பிறகே அனுமதி அளிக்கப்பட்டது. வேலுச்சாமிபுரத்தை தேர்வு செய்யும்போதே ஆனந்த் திருப்தி தெரிவித்தார்.
“அப்போது வேலுச்சாமிபுரத்தை ஏற்பதற்கு ஆனந்த் மறுப்பு தெரிவிக்கவில்லை. நேர அட்டவணையை விஜய் கடைப்பிடிக்காததே கூட்ட நெரிசலுக்கு காரணம். வேகமாக வரச் சொல்லி காவல்துறையினர் அறிவுறுத்தியதை மீறி மாற்றுவழியில் வந்தார்,” என்றார்.
அவரது வாதத்தைத் தொடர்ந்து நீதிபதி பரத் குமார் கூறுகையில், “மூன்று இடமும் போதுமானது கிடையாது. காலாண்டு விடுமுறை, வார விடுமுறை நாள் என்றபோதும், மக்கள் குறைவாக வருவார்கள் என்று எப்படி மதிப்பிட்டீர்கள்.
தொடர்புடைய செய்திகள்
“10,000 பேர் தான் வருவார்கள் என்று எதனை வைத்து கூறினீர்கள், திடல் போன்ற இடத்தை கேட்காதது ஏன், அதிகக் கூட்டம் வருமென்று விஜய்க்கு தெரியுமா, அவரிடம் சொல்லப்பட்டதா, கூட்டம் அளவு கடந்து சென்றபோது நிர்வாகிகள் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்,” என அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டார்.
தவெக வழக்கறிஞர் அளித்த பதிலில், “காவல்துறையினர் ஒவ்வொரு மனுவாக நிராகரித்தனர். சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் யாரும் கூட்டத்துக்கு வரமாட்டார்கள் என நினைத்தோம்.
“இவ்வளவு கூட்டம் வருமென நாங்கள் நினைக்கவில்லை. காவல்துறை போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை. காவல்துறையின் 11 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டோம்,” என்றார்.
காவல்துறை தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், “கூட்டம் அளவுகடந்து சென்ற போது பேருந்தை முன்னதாகவே நிறுத்தி பேசச் சொல்லி நாங்கள் அறிவுறுத்தினோம். ஆனால், ஆதவ் அர்ஜுனா கேட்க மறுத்துவிட்டார்,” என்று வாதிட்டார்.
விடிய விடிய விசாரணை
முன்னதாக, கரூர் பிரசாரக் கூட்டத்தை ஏற்பாடு செய்த தவெக மாவட்டச் செயலாளர் மதியழகனை கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் தலைமையிலான காவல்துறையினர் திங்கட்கிழமை இரவு திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த கூடலூரில் கைது செய்தனர்.
தொடர்ந்து, மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்த தவெக மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
மதியழகனிடம் காவல்துறையினர் விடிய விடிய 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், செவ்வாய்க்கிழமை காலை மதியழகனும் மாசி பவுன்ராஜும் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1க்குக் கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரது கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.