சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டி அவரது மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனால், தமிழகத்தின் அரசியல் வட்டாரத்திலும் திரையுலகிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சங்கீதாவின் மனு, வரும் மார்ச் 20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது விஜய்யும் சங்கீதாவும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்கள் எனத் தெரிகிறது.
சங்கீதா 12 பக்க மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அந்த மனுவில், “எங்களது திருமண வாழ்க்கை தொடக்க காலத்தில் மகிழ்ச்சியாகவே கடந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது கணவர் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தேன்.
“பின்னர் கடந்த 2021 செப்டம்பர் முதல் 2022 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் வழக்கறிஞர் மூலம் விஜய்யிடம் பேசினேன். அப்போது அந்த நடிகையுடனான தொடர்பைத் துண்டிப்பதாக தெரிவித்திருந்தார்.
“ஆனால் அவர் என்னை ஒதுக்கி வைத்துவிட்டு, நடிகையுடன் தொடர்பைத் தொடர்ந்தார். இது எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு மீறிய இந்த உறவை நான் தட்டிக் கேட்டதால் பொருளாதார ரீதியாக எனக்கு நிறைய கட்டுப்பாடுகளை விஜய் விதித்தார்.
“2021 முதல் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் மனத்தளவிலும் உணர்வுபூர்வமாகவும் இருவரும் பிரிந்தே வாழ்கிறோம்.
“அனைத்துத் தரப்பினரின் மதிப்பைக் காக்கும்வகையில், நடிகையின் பெயரை வெளியிடாமல் தவிர்க்கிறேன். தேவைப்படுமாயின், விஜய்யுடன் திருமணம் மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2ஆவது எதிர் மனுதாரராகவும் சேர்ப்பேன்.
“நெருக்கடி ஏற்படுமாயின், விஜய்க்கும் நடிகைக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வெளியிடுவேன,” என்று சங்கீதா தெரிவித்துள்ளார்.


