திண்டுக்கல்: தனியார் தோட்டங்களில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக கொடைக்கானல் மக்களிடையே கவலையும் பதற்றமும் நிலவி வருகிறது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது கொடைக்கானல். தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது.
மலைப்பகுதிகளில் நிலவும் கடும் வெயில் காரணமாக மக்கள் அவதிப்படுகின்றனர்.
கொடைக்கானலை சுற்றி ஏராளமான வனப்பகுதிகளும் பயன்படுத்தப்படாத நிலங்களும் உள்ளன.
இந்நிலையில் அங்குள்ள புலியூர் கிராமத்துக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள நூறு ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
இதன் காரணமாக அங்குள்ள செடிகள், மரங்கள் முழுவதும் எரிந்து நாசமாகும் அபாயம் நிலவுகிறது.
கொடைக்கானலின் பல்வேறு இடங்களில் மலைகள் மற்றும் இயற்கையை ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மலைப்பாங்கான இடங்களில் தற்காலிக தங்கு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை வனப்பகுதிக்கு அருகில் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


