இந்தியாவின் மக்களவையிலும் மாநில சட்டமன்றங்களிலும் மகளிர்க்கு 33 விழுக்காடு இடமளிக்கும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா அதிக எதிர்ப்பு காரணமாகத் தோல்வி அடைந்துவிட்டது.
ஆனால், மசோதா வென்று சட்டமானால்தான் பெண்களுக்கு அதிக இடம் தர முடியுமா, நாம் தமிழர் கட்சியைப் பாருங்கள், ஆணுக்குச் சரிசம எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்களை நிறுத்தி சாதிக்கிறது அந்தக் கட்சி என மாதர் சங்கம் குரல் எழுப்புகிறது. ஏட்டளவிலும் ஓட்டளவிலுமே பெண் முன்னேற்றம் தேங்கி நிற்பதாக ஆதங்கப்படுகிறது அந்தச் சங்கம்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையில் பெரிய முன்னேற்றம் இல்லை. ஆயினும், கடந்த பத்தாண்டுகளில் பெண் பிரதிநிதித்துவம் படிப்படியாக தமிழகத்தில் முன்னேற்றம் கண்டு வருவதைக் காணலாம்.
1967ஆம் ஆண்டில் மொத்த வேட்பாளர்களில் 11 பேர் மட்டுமே (1.41%) பெண்களாக இருந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 443ஆக உயர்ந்துள்ளது. இது 11.01% ஆகும். எண்ணிக்கை உயர்ந்தாலும் விகிதாசார அடிப்படையில் பெண்கள் தொடர்ந்து மிகச் சிறிய வட்டத்திற்குள்ளேயே வைக்கப்படுகின்றனர்.
1970கள் மற்றும் 1980களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 3%க்கும் குறைவாகவே இருந்தது . 1991ஆம் ஆண்டின் வேட்பாளர்களில் பெண்களின் பங்கு 3.6%ஆக உயர்ந்தது. 1996ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக, அப்போது போட்டியிட்ட வேட்பாளர்களில் 156 பெண்கள் களமிறங்கியதால் அவர்களின் விகிதம் 15.16% ஆனது. ஆனால், மறுபடியும் பழைய நிலைக்குத் திரும்பி, 2001, 2006, 2011 தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஒரு குறுகிய வரம்பிற்குள்ளேயே சுழன்றுகொண்டிருந்தது.
2016 தேர்தலில் 320 பெண்களும் (8.58%) 2021 தேர்தலில் 413 பெண்களும் வேட்பாளர்களாகக் களமிறங்கியதால் அவர்களின் விகிதம் 10 விழுக்காட்டைத் தாண்டியது. இனிவரும் ஆண்டுகளில் இந்த விகிதத்தை உயர்த்துவது பெண்களின் கைகளிலேயே உள்ளது என்கின்றனர் அரசியல், பொருளியல் நிபுணர்கள்.
தேர்தலில் போட்டியிட அதிக பெண்கள் முன்வருவதில்லை, அப்படியே வந்தாலும் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கும் அளவுக்கு வசதி இருப்பதில்லை. ஆண்கள் நிரம்பி வழியும் அரசியல் களத்தில் எந்த ஒரு பின்புலமும் இல்லாத பெண்ணால் சாதிக்க இயலாது. அதனால்தான், வாய்ப்பளிக்கப்படும் பெண்களில் பெரும்பாலானோர் வாரிசுகளாகவே உள்ளனர். ஆணாதிக்கத்திற்கு ஈடுகொடுக்க இயலாத பெண்களால் வெற்றிபெற முடியாமல் போனால் கட்சியின் மதிப்பு போய்விடும் என கட்சிகள் கருதுவதும் பெண் வேட்பாளர்கள் குறைந்திருப்பதற்கு முக்கியக் காரணம் என்பது சுயேச்சை ஆய்வாளர் அக்ஷி சாவ்லாவின் கருத்து.
ஆயினும், இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமான உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ்நாட்டில் 1,400க்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது ஆறுதல் தருகிறது. சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் வெற்றிபெறத் தேவைப்படும் அசுர பலம் உள்ளாட்சித் தேர்தல்களில் தேவைப்படுவதில்லை.
வீடாளும் பெண்மை நாடாள்வது இந்திரா காந்தியோடும் ஜெயலலிதா, மம்தாவோடும் நின்றுவிடுமோ என்ற கவலை இந்தியப் பெண்களுக்கு! -திருநா

