விழுப்புரம்: அதிமுக ஆட்சி அமைந்தால், மகளிர் உரிமைத் தொகை மனநிறைவோடு வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த தேர்தலின்போது திமுக, குடும்பத்தலைவிக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்தது என்றும் ஆட்சிக்கு வந்து 25 மாதம் கழித்து தான் அந்தத் தொகை வழங்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.
அந்தத் தொகையை மக்களுக்கு கொடுப்பதற்காக சட்டமன்றத்தில் அதிமுக அரசு அழுத்தம் கொடுத்தன் பேரில்தான் உரிமைத் தொகை கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், 2026ஆம் ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில் 30 லட்சம் பேருக்கு விதிகளை தளர்த்தி மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்படும் என தேர்தலுக்காக முதல்வர் ஸ்டாலின் நடிப்பதாகவும் விமர்சித்தார்.
“கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்குறுதியாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1,500 வழங்கப்படும் என அறிவித்தோம். ஆனால், 1,000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 1,500 ரூபாயை விட்டுவிட்டீர்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மனநிறைவு படும்படி நிச்சயம் அந்தத் தொகையை வழங்குவோம்,” என கூறினார்.
எதிர்வரும் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.