‘தாரம்’ என்பது வெறும் ‘தாரம்’ அல்ல. அவள் தன் வீட்டின் ‘பொருளாதார’மாகத் திகழ்கிறாள்.
ஒருகாலத்தில் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற தீவிரமாகப் போராடிய பெண்கள், பின்னர் பொருளியல் ரீதியில் தங்களை நிலைப்படுத்திக்கொள்ள மேலும் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி.
1893ஆம் ஆண்டு நியூசிலாந்தில் வளர்ந்த பெண்கள் அனைவரும் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெண்கள் தேர்தலில் போட்டியிட்டு வென்றால் நாடாளுமன்ற உறுப்பினராகலாம் என அறிவித்தது ஆஸ்திரேலியா.
இதன்பின்னர் பெண்களின் உரிமைக்கான போராட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்றுள்ளன. எனினும் 1900 ஆண்டுகளின் தொடக்கத்தில்தான் பொருளியல் ரீதியிலான வளர்ச்சியே பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் பாராட்டுகளையும் பெற்றுத் தரும் என்ற சிந்தனை ஏற்பட்டு உலகெங்கும் அது பரவத் தொடங்கியது.
எனினும், 19ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில்தான் பொருளியல் வளர்ச்சி குறித்த ஆர்வமும் அக்கறையும் பெண்கள் மத்தியில் பரவலாக அதிகரித்தது எனலாம். அதன் ஒரு வடிவமாக உருவானதுதான் மகளிர் சுய உதவிக் குழு.
சிறு விதையாகத் தொடங்கிய இந்தத் திட்டம் இப்போது லட்சக்கணக்கான உறுப்பினர்களுடன் ஆலமரமாய் மாறியுள்ளது.
பெண்களின் சமூக, பொருளியல் மேம்பாட்டிற்கான திட்டம்
சுய உதவிக் குழு என்பது, குறைந்தபட்சம் 12 முதல் 20 பெண்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
பொருளியல் ரீதியிலான பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் தனிநபர் வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்திலும் கிராமப்புறங்களிலும் சிற்றூர்களிலும் இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கம் சார்பில் இக்குழுக்களுக்கு சுழல்நிதியும் வங்கிகள் மூலம் கடன்களும் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் மட்டுமின்றி, தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இத்தகைய குழுக்கள் காணப்படுவதாக உலக வங்கி இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1989ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக தர்மபுரி மாவட்டத்தில்தான் காலஞ்சென்ற முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மகளிர் சுய உதவிக்குழு தொடங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் மட்டுமே 4.73 லட்சம் சுய உதவிக் குழுக்களில் 53.94 லட்சம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளதாக தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி திரு.ராகுல், தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
பெண்களின் சமூக, பொருளியல் மேம்பாட்டிற்காகத் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது மகளிர் திட்டம் என்றார் அவர்.
மாபெரும் இயக்கமாக மாறிய முன்னோடித் திட்டம்
பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி (International Fund for Agricultural Development) நிறுவனத்தின் உதவியுடன் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கும் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டது.
தர்மபுரியில் தொடங்கப்பட்ட சுய உதவிக் குழு இயக்கம் படிப்படியாக வளர்ந்து, தற்போது தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மற்றும் நலிவுற்ற மகளிரை இணைத்து, ஒரு மாபெரும் சக்திவாய்ந்த இயக்கமாக மாறியுள்ளது.
தர்மபுரியில் கிடைத்த வெற்றி, 1997ஆம் ஆண்டு இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய தூண்டுகோலாக அமைந்தது எனலாம். இதன் எதிரொலியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மகளிர் சமூக மேம்பாடு அடைதல், மகளிரிடையே ‘நமக்கு நாமே’ என்ற உணர்வை ஏற்படுத்துதல், சமூக விழிப்புணர்வை உண்டாக்குதல், குடும்பத்திலும் சமூகத்திலும் முடிவெடுக்கும் பொறுப்பினை பகிர்ந்தளிக்கச் செய்தல், அரசு மற்றும் பிறதுறை நலத் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெற வைத்தல், பொருளியல் மேம்பாடு அடையச் செய்தல், சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்படுகின்றன.
“அனைத்திற்கும் மேலாக, பெண்கள் தங்களின் நிதித் தேவைகளைச் சுயமாக நிறைவேற்றிக் கொள்வதுதான் இக்குழுவின் அடிப்படை நோக்கம் எனலாம்.
“இதன் மூலம் குடும்பத்தின் பொருளியல் நிலையை உயர்த்தமுடியும் என்ற நம்பிக்கை மகளிர் மத்தியில் ஏற்பட்டதன் விளைவாகவே, தமிழகத்தில் இந்தத் திட்டம் பெரும் வெற்றி அளிக்கக்கூடிய இயக்கமாக வளர்ந்துள்ளது.
“விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு அமைகிறது,” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தெற்காசியாவில் மகளிர் குழுக்களின் பங்களிப்பு
1970களில் இருந்து, தெற்காசியாவில் பெண்களின் பொருளியல் வலிமையை மேம்படுத்துவதில் மகளிர் குழுக்கள் முக்கியப் பங்காற்றி வருவதாக, உலக வங்கியின் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
“இந்தியாவின் சுய வேலைவாய்ப்பு பெண்கள் சங்கம் (SEWA) ஆரம்பகால மற்றும் மிகவும் பிரபலமான குழுக்களில் ஒன்றாக விளங்குகிறது. பெண்கள் தொழில், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் SEWAவின் அணுகுமுறை உலகளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
“வாழ்வாதாரம், சமூக நடவடிக்கைகள், சுகாதாரம், இதர அதிகாரங்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்படுகின்றன,” என்று உலக வங்கி பாராட்டி உள்ளது.
இக்குழுக்கள் பெண்களின் சேமிப்புகளை உயர்த்தி, அரசியல், சமூக வாழ்க்கையில் பங்கேற்பதை அதிகரித்தபோதிலும், வருமானத்தை மேம்படுத்துவதிலும் தொழிலாளர் சந்தை பங்கேற்பிலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது தெற்காசியாவில் உள்ள மகளிர் குழுக்களின் மதிப்பாய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக அந்த வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.
கிராமப்புற ஏழைகள் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதால் அடையக்கூடிய இன்னல்கள் ஏராளம். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் திட்டத்தின் மூலம், அதில் உறுப்பினர்களாக உள்ள மகளிர் தொகுப்பு சேமிப்பில் இருந்து பெறக்கூடிய கடன்கள், இந்த வட்டி முதலைகளை நம்பி இருப்பதில் இருந்து அவர்களைக் காப்பாற்றுகிறது. உலக வங்கி இதையும் சுட்டிக்காட்டி உள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுக்களிலும் அரசியல் புகுந்துதான் இருக்கிறது. வாக்குக்குப் பணம் கொடுத்து வெற்றி பெறும் அரசியல் கட்சியினர், மகளிர் சுய உதவிக்குழு மூலம் பணப்பட்டுவாடா செய்வதாகப் புகார் எழுந்துள்ளது. தேர்தல் ஆணையத்தாலும் இதனைத் தடுக்க முடியவில்லை எனச் சமூக ஆர்வலர்கள் சாடுகிறார்கள்.
பொதுவாக பெண்கள் வேலை முடிந்த நேரங்களில், அக்கம்பக்க வீட்டுப் பெண்களுடன் அரட்டை அடிப்பது வழக்கம். அப்போது தங்களை எந்தக் கட்சி பணம் பட்டுவாடா செய்யச் சொல்கிறதோ, அந்தக் கட்சிக்கு ஆதரவாக, அதன் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசுத் திட்டங்களை எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்கிறார்கள் என்பதுதான் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. - பக்கங்கள் புரளும்