எந்தத் தேர்தலாக இருந்தாலும், என்ன அலை வீசினாலும் ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்துவது பெண்களின் வாக்குகள்தான் என்பது இதுவரை நிகழ்ந்துள்ள உண்மை.
எம்ஜிஆரின் பெரிய வாங்கு வங்கியாக பெண்கள் இருந்தனர். அவருக்குப் பின்னர் ஜெயலலிதாவை பெண்கள் ஆதரிக்கத் தொடங்கினர். அந்த இருவரும் இறக்கும் வரை அவர்களின் வெற்றியைச் சாதகமாக்கியவர்கள் பெண்கள்.
இன்றைக்கு இன்ஸ்டா இளையர்கள் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்துவார்கள் என்று பலவாறு கூறப்படுகிறது. முதல்முறை வாக்களிப்போர் உட்பட வாக்காளர் பட்டியலில் உள்ள 20 விழுக்காட்டு இளையர்களும் ஒரே கட்சிக்கு வாக்களித்துவிட்டதைப்போன்ற பிம்பம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இளையரின் பார்வை மற்ற கட்சிகளின்மீதும் உள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதிகூட முதல்முறை வாக்களித்துள்ளார். அவர் ‘விசில்’ அடிப்பார் என்று சொல்லிவிட முடியுமா?
இளையரின் ஆதரவு இப்படி பல கட்சிகளுக்கும் பரவலாக இருப்பது எல்லாத் தேர்தல்களிலும் நடப்பதுதான். ஆயினும், பெண்களின் ஆதரவு மட்டும் ஒரே குவியலாக ஏதேனும் ஒரு கட்சியின் பக்கமே சாயும்.
தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (51%) பெண்கள். ஆண் வாக்காளர்களைவிட ஏறத்தாழ 12 லட்சம் அதிகம். 234 தொகுதிகளில் 215ல் பெண்களின் கையே ஓங்கியுள்ளது. இம்முறை ஆண்களைக் காட்டிலும் 17 லட்சம் பெண்கள் அதிகமாக வாக்களித்திருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பெண்களின் வாக்குகளைத் தன்வசம் இழுக்க 2021 தேர்தலில் புதிய உத்தியைக் கையாண்டது திமுக. மகளிர் உரிமைத் தொகை ரூ1,000, மகளிர்க்கு கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் என வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தது அக்கட்சி. அதற்குக் கைமேல் பலன் கிடைத்தது. பெண்களின் ஆதரவு திமுக பக்கம் திரும்பி, ஆட்சியை அதனிடம் கொடுத்தது.
கட்டணமில்லாப் பேருந்துப் பயணத்தால், வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள ஒவ்வொரு பெண்ணும் மாதம் ரூ.888 சேமிக்கிறார்கள் என்றும் அரிசி, மளிகைப் பொருள்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்ய ரூ.1,000 மாத உதவித்தொகை அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்றும் அதனால், பெண்கள் கடன் வாங்குவது குறைந்துள்ளது என்றும் தமிழ்நாடு திட்டக்குழு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
உதவி ஒருபக்கம் இருந்தாலும், பாலியல் வன்கொடுமையும் போதைப்பொருள் புழக்கமும் அதிகரித்து, பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது என அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செய்த பிரசாரம் பெண்களை ஈர்த்துள்ளதாக சில ஊடகங்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டில் ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழ்ந்தது திமுக அரசின் மீதான நம்பிக்கையில் களங்கத்தை ஏற்படுத்தியதாக விமர்சகர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
அதனை அறிந்ததாலோ என்னவோ, இந்தத் தேர்தலில் திமுகவும் அதிமுகவும் மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக வழங்குவோம் எனக் கூறின. அதையே 2,500 ரூபாயாக வழங்குவோம் என்றது விஜய்யின் தவெக. தாலிக்குத் தங்கம், மகளிர்க்கு தனித் துறை, அண்ணன் சீர், தாய்மாமன் சீர், அரசுப் பள்ளியில் உயர்கல்வி மாணவியர்க்கு மாதம் ரூ.1,500, சுய உதவிக்குழு பெண்களுக்கு ரூ. 5 லட்சம் வரை மானியத்துடன் கடனுதவி, வீட்டு உபயோகப் பொருள் வாங்க ரூ.8,000 ‘இல்லத்தரசி கூப்பன்’ போன்ற வாக்குறுதிகளை, பெண்களை மையமாக வைத்தே அந்த மூன்று கட்சிகளும் வழங்கியுள்ளன. தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் அவசரமாக பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதையும் கவனிக்க வேண்டும்.
இந்தியாவின் பெண் தொழிற்சாலைப் பணியாளர்களில் 43 விழுக்காட்டினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆண்களைக் காட்டிலும், தமிழ்நாட்டின் கிராமப்புறப் பெண்களில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தினக்கூலிகள். வறுமையைப் போக்க அரசின் நலத்திட்ட உதவிகளையே அவர்கள் பெரிதும் எதிர்பார்ப்பதால், அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
எனவே, இம்முறை இளையர் ஆதரவு பிரிந்தாலும், வாரி வழங்கப்பட்ட வாக்குறுதிகளால் பெண்களின் ஆதரவில் வெல்வோம் என்ற நினைப்பில் ஒவ்வொரு கட்சியும் உள்ளன. -திருநா

