தேனி: ஐந்து பேர் கொண்ட வாக்குச்சாவடியில் நடந்துள்ள அதிசய வாக்குப்பதிவு இணையத்தில் வலம் வருகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் வருசநாடு மலை உள்ளது. அங்குள்ள வெள்ளிமலை கிராமத்தில் ஐந்து வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்காக மட்டும் தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அங்கு நான்கு வாக்குகள் பதிவாகின. ஒருவர் மட்டும் வாக்களிக்காத நிலையில் நால்வர் தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
மாலை 6 மணி வரை காத்திருந்தும் ஐந்தாவது வாக்காளர் வராத நிலையில் நான்கு வாக்குகளுடன் அங்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
இதற்கிடையே, அந்த வாக்குச்சாவடியில் பணியில் இருந்த அலுவலர் ஒருவர் வேறு வாக்குச்சாவடியைச் சார்ந்தவர். அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதியுடன் வெள்ளிமலையிலேயே தனது வாக்கைப் பதிவு செய்தார். எப்படியோ ஐந்து வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் 100 விழுக்காடு வாக்குப் பதிவாகிவிட்ட அதிசயம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
மற்றோர் அதிசயமும் அங்கு நிகழ்ந்தது. ஐவர் வாக்களிக்க ஆறு பேர் பணியில் அமர்த்தப்பட்ட அதிசயம்தான் அது. வாக்குப்பதிவு அலுவலர், துணை ராணுவ வீரர், காவல்துறை துணை ஆய்வாளர் என ஆறு பேர் அங்குத் தேர்தல் பணியாற்றினர்.
அந்த வெள்ளிமலை வாக்குச்சாவடி தேனி ஆண்டிப்பட்டியிலிருந்து 75 கி.மீ தூரம் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது. கரடுமுரடான, மின்சார வசதி இல்லாத அந்தப் பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. காட்டுப் பகுதிக்குள் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குக் கொண்டு செல்லப்பட்டன.

