சென்னை: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நிலவி வந்த பல்வேறு ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
“சட்டமன்றத்தில் விளிம்புநிலையில் உள்ள மக்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கம்.
“ஆனால், நான் துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதாகவும், தொங்கு சட்டசபை அமையும் என்ற கணிப்பின்கீழ் நான் களம் இறங்குவதாகவும் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.
“எனது அரசியல் நேர்மையைக் கொச்சைப்படுத்தும் விதமாக இத்தகைய அவதூறுகள் பரப்பப்படுகின்றன,” என்று தெரிவித்தார்.
திமுக கூட்டணிக் கட்சிகளைப் பிரிக்க நயவஞ்சகமான முயற்சிகள் நடப்பதாகச் சாடிய அவர், ‘ஆட்சியில் பங்கு’ என்பது கட்சியின் கொள்கையாக இருந்தாலும், இந்தத் தேர்தலில் அதைத் தாங்கள் கோரவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆளூர் ஷாநவாஸுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “சமூகநீதி அடிப்படையிலேயே இடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. வேட்பாளர் தேர்வில் என் மீது யாரும் செல்வாக்கு செலுத்த முடியாது,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், காட்டுமன்னார் கோயில் தொகுதியில் தான் போட்டியிடவில்லை என்றும் மறைந்த தலைவர் இளையபெருமாளின் இளையமகன் ஜோதிமணி போட்டியிடுவார் என்றும் திருமாவளவன் அறிவித்தார்.
“பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை என்பதை எனது கடந்த கால தியாகங்களே பறைசாற்றும்,” எனவும் அவர் கூறினார்.

