வேலைக்காக வெளிநாடு சென்று, தங்கள் உழைப்பால் முன்னேறி, நல்ல நிலைமையை எட்டி, அங்கேயே வேரூன்றிய தமிழர்களைத் தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
சென்னை வர்த்தக மையத்தில் ‘தமிழால் இணைவோம்! தரணியில் உயர்வோம்!’ எனும் கருப்பொருளுடன் ‘அயலகத் தமிழர் தினம் 2026’ ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) தொடங்கியது.
கண்காட்சியைத் தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றிய திரு உதயநிதி, தமிழ் என்ற அடையாளத்திற்குமுன் வேறு எதுவும் நிற்க முடியாது என்று கூறினார்.
“தமிழ்மொழி என்பது நம் அனைவரையும் இணைக்கக்கூடிய ஒரு மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்துப் பார்க்காது. யாருக்கும் எந்த பேதத்தையும் காட்டாத மொழிதான் நம் தாய்மொழியான தமிழ்மொழி. தமிழ் அடையாளத்திற்குமுன் வேறு எந்த அடையாளமும் நிற்க முடியாது, போட்டி போடவும் முடியாது,” என்று அவர் பெருமிதத்துடன் சொன்னார்.
அப்படித் தமிழர்கள் அனைவரும் தமிழால் இணைந்ததால்தான் இன்றைக்குத் தரணியை வென்றுகொண்டிருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்
“ஒன்றாக இணையாத எந்த இனமும் உலகில் உயர்ந்ததாக வரலாறே கிடையாது. அந்த வகையில், உலகெங்கும் வாழக்கூடிய தமிழர்களை ஒருங்கிணைக்கக்கூடிய அந்தப் பணி என்பது மிக மிக முக்கியமானது. இந்த நேரத்தில் மிக அவசியமானது. அதைவிட முக்கியம், அவர்களின் நலன்களைப் பாதுகாப்பது,” என்றார் துணை முதல்வர்.
தொடக்கத்தில் சிறிய வேலைக்காகத் தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்குச் சென்றனர் என்றும் ஆனால் தமிழர்கள் பலர் இன்று மருத்துவராக, பொறியாளராக வெளிநாட்டில் பெரிய வேலையில் இருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வளர்ச்சிக்குத் தமிழக அரசின் பங்கு அளப்பரியது என்ற திரு உதயநிதி, ‘அயலகத் தமிழர் நல வாரியம்’, ‘வேர்களைத் தேடி’, ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ போன்ற திட்டங்களைத் தமிழ்நாட்டு அரசு தொடங்கியதைச் சுட்டினார்.
அயலகத் தமிழர் நல வாரியத்தில் தற்போது 32,000 பேர் உறுப்பினர்களாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தமிழ்ச் சங்கங்களுக்கு நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி விருது வழங்கிச் சிறப்பித்தார்.
தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கைத் திரு உதயநிதி முன்னிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார். உணவு, பண்பாடு, வணிகம், கைவினைப் பொருள்கள், தமிழ் இலக்கியம் போன்றவை சார்ந்த 252 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அயலகத் தமிழர் தின நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான திங்கட்கிழமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.

