சென்னை: திருக்குறளின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக தென்கொரியாவில் முதன்முறையாக ‘உலகளாவிய திருக்குறள் மாநாடு’ நடைபெற்றது.
நவம்பர் 8ஆம் தேதி அன்று அங்குள்ள சேஜோங் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.
திருக்குறளை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்த வீரமாமுனிவரின் பிறந்த நாள் நவம்பர் 8ஆம் தேதி என்பதால், அன்றைய தினம் மாநாடு நடைபெற்றதாகவும் அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களைச் சமகால சவால்களுக்கான தீர்வுகளாக ஆராய்ந்து ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் ஏற்பாட்டில் ‘காலத்தை கடந்த உண்மைகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு பட்டயமும் கேடயமும் அளிக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரிய மொழியை அறிமுகப்படுத்தியதற்காகவும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஆறு இந்திய மாணவர்களுக்கு தென்கொரியாவில் ஆராய்ச்சி வாய்ப்பு வழங்கியதற்காகவும் இப்பாராட்டு அளிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தமிழக தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 156 திருவள்ளுவர் சிலைகளை நிறுவியுள்ளார். அவருக்கு ‘திருவள்ளுவர் உலகத் தூதர் வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.
எழுத்தாளர் மா. அன்பழகன் ‘உலகளாவிய தமிழ் இலக்கிய சேவையாளர் விருது’ வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
மேலும் பல்வேறு பிரிவுகளில், மூன்று சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

