சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில், உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் நாளை (மார்ச் 14) முதல் இந்தப் பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், முக்கியமான பிரமுகர்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்குவது வழக்கம். ‘ஒய்’, ‘இசட்’ எனப் பல்வேறு பிரிவுகளின்கீழ் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்படும்.
அந்த வகையில் விஜய்க்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மத்திய உளவுத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதை ஏற்று நாளை முதல் 8லிருந்து முதல் 11 பேர் வரை துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை கமாண்டோக் வீரர்கள் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க உள்ளனர்.
இவர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிய வந்துள்ளது. சுற்றுப்பயணம், மாநாடு என அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், அவருக்கான பாதுகாப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

