சென்னை: தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10.70 கோடி உயர்வகை கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, கஞ்சாவைக் கடத்திவந்த இளையர் கைதானார்.
கடந்த ஓராண்டாக வெளிநாடுகளில் இருந்த சென்னைக்குப் போதைப்பொருள் கடத்திவருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) சென்னை வந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது பயணிகளில் ஒருவராக வந்த இளையரின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்தன. இதையடுத்து, அதிகாரிகள் அவரைத் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவர் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று நாடு திரும்பியது தெரியவந்தது.
அவரது பயணப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது 23 உறைகளில் ரூ.10.70 கோடி மதிப்புள்ள 10.70 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைதானார்.
முதற்கட்ட விசாரணையில் அவர் போதைப்பொருள் கடத்தல் ‘குருவி’யாகப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

