கூட்டணி அமைப்பது, தொகுதிகளைப் பங்கிடுவது, வேட்பாளர்களைத் தேர்வு செய்வது என அனைத்திலும் திமுக, அதிமுக எனும் இருபெரும் கூட்டணிகள் இதுவரை இல்லாத அளவுக்கு ஆராய்ந்து, ஆலோசித்து, பின்னர் ஆலோசித்து, ஆராய்ந்து என இரவு பகலாக ஈடுபட்டன.
2021 தேர்தலைப்போல இந்தத் தேர்தல் அவ்வளவு சுலபமானதல்ல என்பதை இரு கூட்டணிகளும் புரிந்து வைத்துள்ளன.
ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனியாகப் போட்டியிடுவதால் வாக்குகள்தான் பிரிகின்றன. அந்தக் கட்சியைப்போலவே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதால் பிரியும் வாக்குகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். பெரிய கட்சிகள் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கும்.
கடந்த தேர்தலில் 500க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் பல தொகுதிகளின் தலை எழுத்து மாறியது. தி. நகர் தொகுதியில் 137 வாக்குகளில் அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணனும் மொடக்குறிச்சியில் 281 வாக்கு வித்தியாசத்தில் திமுகவின் சுப்புலட்சுமியும் தென்காசியில் 370 வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவின் செல்வ மோகன்தாஸ் பாண்டியனும் தோல்வியடைந்தனர். இதேபோல பல தொகுதிகள்.
கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதாலும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை மக்கள் பார்த்துவிட்டதாலும் 2021ல் திமுக பக்கம் மறைமுகமான ஆதரவு அலை இருந்தது.
இருப்பினும், அதிமுக கூட்டணி வெறும் 5.7 விழுக்காட்டு வாக்குகளில்தான் வெற்றியைத் தவறவிட்டது. அதிமுக-திமுக நேரடி வாக்கு வித்தியாசம்கூட நாலரை விழுக்காடுதான்.
191 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 66 தொகுதிகளில் வென்றதன் மூலம் அதன் கூட்டணி கௌரவமான தோல்வியைச் சந்தித்தது. பாமக 5 இடங்களிலும் பாஜக 4 இடங்களிலும் வென்றன. இந்தத் தேர்தலிலும் அதே கூட்டணி தொடர்கிறது. 2.4 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்ற அமமுகவும் அதில் இணைந்துள்ளது.
188 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 133 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. இம்முறை, அது கடினம் என்பதால் தேமுதிக போன்ற கட்சிகளை இழுத்து வந்து கூட்டணி பலத்தை திமுக கூட்டியுள்ளது.
ஏறத்தாழ 5.67 கோடி வாக்காளர்களில் 20க்கும் 29க்கும் இடைப்பட்ட வயதுடைய இளையர்கள் மட்டும் 1.05 கோடி. அவர்களின் விகிதம் 20.7 விழுக்காடு. அந்த இளையர்களில் 12.51 லட்சம் பேர் முதல்முறை வாக்களிக்க உள்ளனர்.
இவர்களின் வாக்குகள்தான் இந்தத் தேர்தலில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கணிப்பு. தவெகவின் வருகையால் இளையர்கள், குறிப்பாக முதல்முறை வாக்களிப்போர் முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.
உலகப் போக்கு, நாட்டு நலன், தொகுதியின் நன்மை என்று எதைப் பற்றியும் சிந்திக்காமல், கண்ணை மூடிக்கொண்டு ஒருசாராரை ஆதரிக்கும் கூட்டமே இந்தத் தேர்தலில் வெற்றியின் போக்கை நிர்ணயிக்கக்கூடும் என கட்சிகளும் கூட்டணிகளும் பதறுகின்றன.
அந்தப் பதற்றத்தின் விளைவுதான், வீட்டுக்கு வீடு ஃபிரிட்ஜ் இலவசம், ஆண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், பெண்களுக்கு மாதாமாதம் ரூ.2,000 என கண்ணை மூடிக்கொண்டு 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அள்ளிவீசத் தூண்டியது எனலாம். திமுகவும் நிறைய வாக்கு இலவசப் பட்டியல் இந்நேரம் வந்திருக்கும்.
ஆக, வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இளையர்களா? இலவசங்களா? என்றே கேட்கத் தோன்றுகிறது. - திருநா

