சென்னை: தமிழக அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்ட புகாரின் பேரில், பிரபல ‘யூடியூபர்’ மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில், தவெக தலைவர் விஜய் கரூரில் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, 41 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து மாரிதாஸ் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.
ஆனால், அக்கருத்துகள் தமிழக அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த மாரிதாஸ் சென்னை நீலாங்கரை பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை (அக்டோபர் 4) காலை மாரிதாசை அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
மாரிதாஸ் பாஜக ஆதரவாளராகக் கருதப்படுபவர். அவர் திமுக அரசு குறித்து யூடியூப் தளத்தில் கடுமையாக விமர்சித்து வந்தார்.