அமெரிக்க நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்த டிரம்ப் ஆதரவாளர்கள்: போலிசார் துப்பாக்கிச்சூடு; 4 பேர் உயிரிழப்பு, 52 பேர் கைது

அமெரிக்க நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்த டிரம்ப் ஆதரவாளர்கள்: போலிசார் துப்பாக்கிச்சூடு; 4 பேர் உயிரிழப்பு, 52 பேர் கைது

2 mins read

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன்வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்க உள்ள நிலையில், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்து, அதற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் நேற்று மேற்கொண்டது.

தேர்தல் சபை வாக்குகளை எண்ணி, முறைப்படி வெற்றிச் சான்றிதழை வழங்குவதற்காக, துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் தொடங்கியது.

தற்போது அதிபராக இருக்கும் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலிசார் திணறினர்.

நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் இடத்துக்குள் நுழைய முற்பட்டனர்.

-

மேடையில் இருந்த திரு ஜோ பைடன் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், தேர்தல் சபை வாக்குகள் இருந்த பெட்டியும் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஜன்னல்களையும் கதவுகளையும் உடைத்து நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயற்சி செய்ததால், அந்த அறைக்குள் போலிசார் கண்ணீர்ப் புகையை உருவாக்கினர்.

அந்த அறையில் இருப்பது பாதுகாப்பானதல்ல என்பதை உணர்ந்து செனட் உறுப்பினர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேற்ற முயன்றபோது, போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் உருவானது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சிலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு பெண் அங்கேயே உயிரிழந்தார். அவர் டிரம்ப் ஆதரவாளரும் ஆகாயப்படை அதிகாரி எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்தக் கலவரத்தில் 14 காவல் அதிகாரிகளும் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கலவரத்தைப் படம் பிடித்த செய்தியாளர்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கத் தொடங்கினர்.

-

இந்தத் தாக்குதலை எதிர்பாராத போலிசார், தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறியதாகவும் அந்தச் சமயத்தில் அங்கிருந்த போலிசாரின் எண்ணிக்கை கலவரத்தைக் கையாளப் போதுமானதாக இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிக எண்ணிக்கையில் போலிசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதனையடுத்து நாடாளுமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் வந்தது. இதற்கிடையே, துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

சட்டவிரோதமாக, அனுமதிக்கப்படாத ஆயுதங்கள் வைத்து தாக்குதலில் ஈடுபட்டதாக 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அபாயகரமான ஆயுதங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்திருந்ததும் பெட்ரோல் குண்டுகளைக் கொண்ட பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதும் தெரிவிக்கப்பட்டது.

-

இதற்கிடையே வன்முறையின் மூலம் ஆட்சியை கவிழ்க்க அதிபர் டிரம்ப் சதி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவரது பதவிக்காலம் வரும் 20ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே அவரை பதவியிலிருந்து நீக்க முடியுமா என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்