இலங்கையில் ஐந்து நாள்களுக்குத் தேவையான எரிவாயு மட்டுமே உள்ளது

இலங்கையில் ஐந்து நாள்களுக்குத் தேவையான எரிவாயு மட்டுமே உள்ளது

2 mins read

இலங்கையில் இன்னும் ஐந்து நாள்களுக்குத் தேவையான எரிவாயு இருப்பு மட்டுமே இருப்பதாக அந்த நாட்டு மின்சக்தி, எரிவாயுத் துறை அமைச்சர் காஞ்சனா விஜயசேகரா கூறியுள்ளார்.

இலங்கையில் நிலவும் எரிவாயு பற்றாக்குறை இன்று மோசம் அடைந்தது.

கொழும்பிலும் நாட்டின் இதரப் பகுதிகளிலும் உள்ள பல சாலைகளை, எரிவாயு வேண்டும் என்று வற்புறுத்தும் வாடிக்கையாளர்கள் முற்றுகை இட்டுள்ளனர்.

பல பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. ஆனால் சில கிலோமீட்டருக்கு வாகனமோட்டிகள் வரிசை பிடித்து நின்றனர்.

சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.

பனதுராவில் எரிவாயுக்காகக் காத்திருந்த நபர் ஒருவர் வரிசையில் காத்திருக்கும்போதே உயிர் இழந்தார் என்று டெய்லி மிரர் நாளேடு கூறியது.

எரிவாயு விநியோகிப்பாளர்களுக்கு ஏற்கெனவே கொடுக்க வேண்டிய 725 மில்லியன் டாலர் தொகையை இலங்கை அரசாங்கத்தால் தர முடியவில்லை என்று திரு காஞ்சனா கூறினார். இனி வரும்

இறக்குமதிகளுக்குக் கடன் வசதி பெற நாடு சிரமப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் எரிவாயுவை வாங்குவதற்கு இந்திய அரசாங்கத்திடம் 500 மில்லியன் அமெரிக்க டாலரை கடனாகக் கேட்டிருக்கிறது. இந்தியா ஏற்கெனவே கொடுத்த கடனைக் கொண்டு இலங்கை வாங்கிய எரிவாயுவை ஏற்றி வந்த கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை அடைந்தது.

-

இலங்கையில் பொருளியல் நெருக்கடி மோசமாகி வரும் வேளையில், பிழைப்புக்காக வெளிநாடு செல்ல நினைத்து கடவுச்சீட்டுகளுக்காக மும்மடங்கு அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

சிலர் நாள்கணக்காக கடவுச்சீட்டு அலுவலகத்தில் காத்துக் கிடக்கின்றனர்.

2022ன் முதல் ஐந்து மாதங்களில் இலங்கை 288,645 பாஸ்போர்ட்டுகளை வழங்கியது.

ஒப்புநோக்க சென்ற ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 91,331 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.