ஈசூனில் 60 வயது மாது ஒருவரைப் பிணை பிடித்த 42 வயது ஆடவர் ஒருவர் திங்கள்கிழமை (ஜனவரி 9) காலை கைது செய்யப்பட்டார்.
ஈசூன் ரிங் ரோட்டில் உதவி கோரி காலை 7.35 மணிக்கு தனக்கு அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்தது.
அந்த ஆடவர் அந்த மாதைக் கத்திமுனையில் பிணை பிடித்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் கத்தி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஈசூன் ரிங் ரோட்டில் புளோக் 108ன் வெற்றுத்தளத்தில், அந்த மாதின் கழுத்தில் அந்த ஆடவர் கத்தியை வைத்திருந்தது தெரிந்தது. காவல்துறை அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.
அதிகாரிகள் அந்த ஆடவருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் புளோக் 110ல் உள்ள உணவங்காடி நிலையத்திற்கு அந்த மாதை அந்த ஆடவர் அழைத்துச் சென்றார்.
சிங்கப்பூர் போலிஸ் படையின் அவசரகால நடவடிக்கை குழுவைச் சேர்ந்ததாக நம்பப்படும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். குண்டு துளைக்காத ஆடைகளை அணிந்திருந்த அவர்கள், துப்பாக்கிகளை வைத்திருந்தனர்.
அந்த ஆடவரை நோக்கி விரைந்த அதிகாரிகள், அதிரடியாகச் செயல்பட்டு மடக்கிப் பிடித்தனர். அங்கிருந்த வழிப்போக்கர் ஒருவரும் உதவினார்.
பிணை பிடிக்கப்பட்ட மாதுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட அவர் மறுத்துவிட்டதாக காவல்துறை கூறியது.
அந்த ஆடவருக்கும் அந்த மாதிற்கும் ஒருவருக்கொருவர் தெரியாது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

