ஈசூனில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 13) இரவு எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்துமீது வாடகை கார் ஒன்று மோதிய விபத்தில் அந்த காரின் ஓட்டுநர் உயிரிழந்தார்.
'கெட்கோ' நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த வாடகை காரை ஓட்டிய 31 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது.
ஈசூன் அவென்யூ 2, ஈசூன் சென்ட்ரல் சந்திப்பில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்த இரவு 10.55 மணியளவில் தனக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இந்த விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வந்தது. அதில், சிவப்பு போக்குவரத்து விளக்கில் நிற்காமல் சென்ற கார் ஒன்று, வேறொரு திசையில் சென்றுகொண்டிருந்த பேருந்துச் சேவை 117ன் வலதுப் பக்கத்தில் வேகமாக மோதுவதைக் காட்டியது.
அந்த காரின் முன்பகுதி நசுங்கிவிட்டது. கார் மோதியதன் தாக்கத்தால் அந்த ஈரடுக்குப் பேருந்து அதிர்ந்தது.
காரின் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் சிக்கிக்கொண்டது கண்டறியப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது. சிறப்பு மீட்புக் கருவிகளைக் கொண்டு அந்த ஆடவர் மீட்கப்பட்டதாக அது சொன்னது.
இந்த விபத்து தொடர்பில் எழுவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அந்த கார் ஓட்டுநர் சுயநினைவுடன் இல்லை. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பேருந்தில் இருந்த பயணிகள் அறுவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது. அவர்கள் 22க்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இந்த விபத்தில் மற்றொரு பயணியும் காயமடைந்ததாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்தது. ஆனால், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படவில்லை என்று அறியப்படுகிறது.
பேருந்து ஓட்டுநருக்குக் காயம் ஏற்படவில்லை என்று எஎஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் அனுபவம், தொடர்புப் பிரிவுத் துணைத் தலைவர் கிரேஸ் வூ தெரிவித்தார்.
மருத்துவமனையில் வெளிநோயாளி சிகிச்சை பெற்ற ஆறு பயணிகளுக்கு உதவ நிறுவனம் அவர்களுடன் தொடர்பில் இருப்பதாக அவர் சொன்னார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த வாடகை கார் நிறுவனமான கெட்கோ, "இந்த விபத்து குறித்து எங்களுக்குத் தெரியும். காவல்துறையின் விசாரணைக்கு நாங்கள் உதவி வருகிறோம்," என்று கூறியது.
இந்த விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

