குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் வரும் ஜனவரி 3ஆம் தேதியிலிருந்து, உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் உள்ள பாதுகாப்புச செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும்.
அந்த இரண்டு இடங்களிலும், வெடிகுண்டு மிரட்டல்கள், துப்பாக்கித் தாக்குதல்கள் போன்றவை நடந்தால், ஆணைய அதிகாரிகள்தான் முதலில் சென்று அவற்றைக் கையாள்வார்கள்.
சிங்கப்பூர் எல்லைகளில் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் நடவடிக்கை இது. இதன்வழி, துணைக்கும் வரும் படைகளுக்காகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் காத்திருக்க தேவை இருக்காது.
அதன் அதிகாரிகள் இன்னும் வேகமாகப் பாதுகாப்பு மிரட்டல்களை எதிர்கொள்ள முடியும்.
உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் தற்போது குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிகளும் காவல்துறையினரும் பாதுகாப்புச் செயல்பாடுகளைக் கூட்டாக கவனித்துக் கொள்கின்றன.
அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதியிலிருந்து பாதுகாப்பு மிரட்டலைக் கட்டுப்படுத்த, காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை போன்றவை நிறுத்தப்படும் முன்னர், குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் முன்னணிக் குழுவினர் முதலில் சென்று செயல்படுவார்கள்.
குடிநுழைவு, சரக்குகள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்குவதில் தற்போது குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் கவனம் செலுத்துகிறது.
ஆணையம் கூடுதல் அம்சங்களில் பொறுப்பு ஏற்கவுள்ளதாக ஆணையத்தைச் சேர்ந்த மூத்த துணை ஆணையர் சுவா டுவான் மெங் கூறினார்.
அதற்கு ஆயத்தமாக, ஆணையம் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளதாகவும் மேலும் பல அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கவிருப்பதாகவும் அவர் சொன்னார்.
மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் சேர்ந்து குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் எவ்வாறு கையாளும் என்பதை விளக்கும் பயிற்சி துவாஸ் சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை அன்று நடத்தப்பட்டது. அதில் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கலந்துகொண்டார்.

