உணவகங்களில் அமர்ந்து சாப்பிட முடியாது என்று கடந்த மாதம் 16ஆம் தேதி நடப்புக்கு வந்த கொவிட்-19 கட்டுப்பாடு, இன்று (ஜூன் 21) முதல் தளர்த்தப்பட்டது.
இருவர் கொண்ட குழுக்களாக மக்கள் மீண்டும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், உணவகங்களில் கூட்டம் அலைமோதவில்லை. பலர் தொடர்ந்து உணவை வீட்டுக்குத்தான் வாங்கிச் சென்றனர்.
விரைவில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும், கூட்டம் திரும்பும், என நம்புகின்றனர் லிட்டில் இந்தியா வட்டார உணவக உரிமையாளர்கள்.
"கடந்த எட்டு மாதங்களில் புதிதாக மூன்று கிளைகளைத் திறந்தோம். இந்தக் குறிப்பிட்ட காலத்தில் மக்களால் நேரடியாக வந்து சாப்பிட முடியாமல் போனது சங்கடமாக இருக்கிறது. இப்போது இரண்டு பேர் மட்டுமே சாப்பிட முடிகிறது. நாளடைவில் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தினால்தான் உணவகங்களால் வியாபாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்," என்றார் 'பனானா லீஃப் அப்போலா' உணவக உரிமையாளர் திரு சங்கர் நாதன், 49.
கிருமித்தொற்று நிலை ஓரளவு முன்னேற்றம் கண்டு வியாபாரம் தலைதூக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார் 'மதுராஸ் விலாஸ்' உணவகத்தின் உரிமையாளர் திருமதி சாஃப்பியா.
மே மாதம் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அவருக்கு ஏமாற்றத்தைத் தந்தன. சையத் ஆல்வி சாலையில் உள்ள அவரது உணவகக் கிளை, வீட்டு விநியோகச் சேவை வழங்கியும் வாடிக்கையாளர் விகிதம் 80% சரிந்ததாக தெரிவித்தார் சாஃப்பியா.
(விரிவான செய்தி நாளைய தமிழ் முரசின் அச்சுப் பிரதியில் இடம்பெறும்)

