ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288ஆக உயர்ந்தது

2 mins read

இந்தியாவின் ஒடிசா மாநிலம், பாலேஸ்வர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) இரவு ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் குறைந்தது 288 பேர் உயிரிழந்தனர்; ஏறத்தாழ 900 பேர் காயமுற்றனர்.

இந்தியாவில் இருபது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான ரயில் விபத்து இது எனக் கூறப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக மாநிலத் தலைமைச் செயலாளர் பிரதீப் ஜனா தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 7 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி இரவு 9.30 மணி) இந்த விபத்து நிகழ்ந்தது. கோல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயிலுடன் மோதிக்கொண்டது.

எந்த ரயில் முதலில் தடம்புரண்டு மற்றொரு ரயில் அதன்மீது மோத காரணமானது என்பது பற்றி அதிகாரிகள் முரண்பட்ட தகவல்களை வழங்கினர்.

இந்த விபத்தில் சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதியதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்விடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவும் அதிகாரிகளும் இருந்தனர்.

பின்னர் பாலேஸ்வரில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்குச் சென்ற திரு மோடி, அங்கு சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதலும் தைரியமும் கூறினார்.

Watch on YouTube

இந்நிலையில், விபத்தில் காயமுற்றோருக்கு ரத்த தானம் வழங்க அரசாங்க மருத்துவமனை ஒன்றுக்கு வெளியே நூற்றுக்கணக்கான இளையர்கள் சனிக்கிழமை (ஜூன் 3) காலை வரிசையில் காத்திருந்தனர்.

நிகழ்விடத்தில் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தென்கிழக்கு ரயில்வே அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.