ஓமிக்ரான் கிருமிப் பாதிப்பு காரணமாக, கிறிஸ்மஸ் வாரயிறுதியில் உலகம் முழுவதும் 6,000க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் தாமதம் அடைந்துள்ளன. விமானச் சேவைகளைக் கண்காணிக்கும் இணையப் பக்கமான Flightaware.com இதுகுறித்து சனிக்கிழமை (டிசம்பர் 25) தகவல் தெரிவித்தது.
சனிக்கிழமை மட்டும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2,800 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அவற்றில் 970க்கும் அதிகமான விமானங்கள், அமெரிக்காவில் இருந்து புறப்படவிருந்தன அல்லது அங்கு செல்லவிருந்தன.
சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை காலை 9.30 மணி நிலவரப்படி, 8,000க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் நிலவியது.
வெள்ளிக்கிழமை ஏறத்தாழ 2,400 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 11,000 விமானச் சேவைகளில் தாமதம் ஏற்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ள விமானச் சேவைகளின் எண்ணிக்கை 1,100ஐ கடந்துவிட்டது.
விமானிகள், விமானச் சப்பந்திகள் மற்றும் இதர பணியாளர்கள் பலரும் தங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி வருகின்றனர். கொவிட்-19 தொற்றியவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த விமானப் பணியாளர்கள் பலரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.
இதனால் லுஃப்தன்சா, டெல்டா, யுனைடெட் ஏர்லைன்ஸ், ஜெட்புளூ, அலாஸ்கா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள், விமானச் சேவைகளை ரத்து செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

