கத்திமுனையில் பெண்ணைப் பிணை பிடித்தவர்மீது குற்றச்சாட்டு

கத்திமுனையில் பெண்ணைப் பிணை பிடித்தவர்மீது குற்றச்சாட்டு

1 mins read

கத்திமுனையில் 60 வயதுப் பெண்ணைப் பிணை பிடித்த ஆடவர்மீது பொது இடத்தில் ஆயுதம் வைத்திருந்ததாக இன்று செவ்வாய்க்கிழமை (10-01-2023) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. முகம்மது ஃபைஸல் முகம்மது ஆரிஃப் என்ற அந்த 42 வயது ஆடவர் நீதிமன்றக் குற்றப் பதிவக அலுவலகத்தில் முன்னிறுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்காக மனநலக் கழகத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். புளோக் 108, ஈசூன் ரிங் ரோட்டில் ஒரு பெண்ணைக் கத்திமுனையில் பிணை பிடித்ததற்காக முகம்மது நேற்று கைதுசெய்யப்பட்டார்.

காலை 7.35 மணியளவில் உதவிகோரி தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ஆடவர் ஒருவர், ஒரு பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்தவாறு பிணை பிடித்திருந்ததை அவர்கள் கண்டனர். காவல்துறையினரின் சமாதானப் பேச்சுக்கு உடன்படாத அந்த ஆடவர், கிட்டத்தட்ட 50 மீட்டர் தொலைவிற்கு கத்திமுனையில் அப்பெண்ணை நடத்தியபடி அருகிலிருந்த காப்பிக்கடைக்குச் சென்றார். பின்னர் காவல்துறையின் அவசரகால நடவடிக்கைக் குழுவினர் அதிரடியாகச் செயல்பட்டு, அவரை மடக்கிப் பிடித்து, அப்பெண்ணை விடுவித்தனர். கிட்டத்தட்ட 20 நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிட்டது. இலேசான காயமுற்ற அப்பெண் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார். முகம்மதின் சிறுநீரைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் உட்கொண்டிருந்ததை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கண்டுபிடித்தது. இதனால், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களிலும் அவர் ஈடுபட்டுள்ளாரா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.