காற்பந்து விளையாட்டு அரங்கில் விபரீதம்: 100க்கும் மேற்பட்டோர் மரணம்

காற்பந்து விளையாட்டு அரங்கில் விபரீதம்: 100க்கும் மேற்பட்டோர் மரணம்

1 mins read

இந்தோனீசியாவில் காற்பந்து போட்டியின்போது நடந்த கலவரத்தில், குறைந்தது 174 பேர் மாண்டனர். சுமார் 180 பேர் காயமடைந்தனர். கலவரம் கூட்ட நெரிசலுக்கு இட்டுச்சென்றதை தொடர்ந்து, இச்சம்பவம் நேர்ந்தது. உலக விளையாட்டரங்குகளில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான விபரீதம் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நாட்டில் நடத்தப்படும் காற்பந்து ஆட்டங்கள் குறித்து பாதுகாப்பு மறுஆய்வை மேற்கொள்ள இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோஉத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு ஜாவா மாநிலத்தில் நடந்த காற்பந்து ஆட்டத்தில் தோல்வியடைந்த அணியின் ஆதரவாளர்கள் திடலுக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை கலைக்க காவல் துறையினர் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டதாகவும் பலர் மூர்ச்சையாகி விழுந்ததாகவும் ஜாவா மாநிலத்தின் தலைமை காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

-

சம்பவயிடத்தில் 34 பேர் மாண்டதாகவும், எஞ்சியவர்கள் மருத்துவமனையில் மாண்டதாகவும் கூறப்பட்டது. பலியானோரில் இரு காவல் துறை அதிகாரிகளும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துகொண்ட இந்தோனீசியாவின் விளையாட்டுத் துறை அமைச்சர், காற்பந்து போட்டிகளில் பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்படும் என்று குறிப்பிட்டார். இந்தோனீசியாவின் முக்கிய லீக் ஆட்டங்கள் குறைந்தது ஒரு வாரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

-

இந்தோனீசியாவில் காற்பந்து விளையாட்டு தொடர்பான வன்முறை புதிதல்ல. எதிர்தரப்பு அணிகளுக்கிடையே மோதல்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று.

Watch on YouTube