மலேசியாவின் கெந்திங் மலை அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 12 பேர் நிலச்சரிவில் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக அந்நாட்டு தீயணைப்பு, மீட்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் புறநகர் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவிலிருந்து இதுவரை 61 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில், தேவையான உரிமமின்றி முகாம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் அரசாங்க மேம்பாட்டு அமைச்சர் கா கோர் மிங் கூறினார்.
காய்கறிகளைப் பயிரிடுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக அவர் சொன்னார். அங்கு முகாமிடும் நடவடிக்கைகளுக்கு உள்ளூர் அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கவில்லை.
இறந்தவர்களில் ஐந்து வயதுச் சிறுவன் உட்பட மூன்று சிறுவர்களும் ஏழு மாதர்களும் இரு ஆடவர்களும் அடங்குவர் என்று சிலாங்கூர் முதல்வர் அமிருதீன் ஷஹ்ரி தெரிவித்தார்.
வியாழக்கிழமை பின்னிரவு 2.24 மணிக்கு நிலச்சரிவு குறித்து அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் மாநிலத் தீயணைப்புத் துறை குறிப்பிட்டது.
கெந்திங் மலையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள முகாம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஒரு ஹெக்டர் பரப்பளவு பகுதி பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட்டபோது, முகாமில் கிட்டத்தட்ட 100 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது.
நிலச்சரிவு ஏற்பட்டது குறித்து வெளியான செய்தியைக் கேள்விப்பட்டு தாம் அதிர்ச்சி அடைந்ததாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
தேடி, மீட்கும் நடவடிக்கைகளை முறையாக நடத்த அரசாங்கத் துறைகளுக்கு தாம் ஆணையிட்டுள்ளதாக சொன்ன அவர், சம்பவம் நிகழ்ந்த பகுதியை இரவில் சென்று பார்வையிட தாம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்கிறது.

