வியாழக்கிழமை (மார்ச் 30) மாலை கனமழை பெய்ததால் சிங்கப்பூரின் சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
ஆர்ச்சர்ட் பிளாசா அருகே கெவனா சாலையிலும் கிராமட் லேனிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது குறித்து பொதுப் பயனீட்டுக் கழகம் மாலை 6.08 மணிக்கு டுவிட்டரில் தகவல் தெரிவித்தது. அப்பகுதிகளில் தண்ணீர் அளவு 90 விழுக்காட்டிற்குமேல் உயர்ந்தது.
டெலிகிராம் செயலியில் மாலை 6.20 மணிக்கு கழகம் வெளியிட்ட மற்றொரு தகவலில், கிராமட் லேன் வழியாகச் செல்வதைத் தவிர்க்கும்படி வாகனமோட்டிகளுக்கு அறிவுறுத்தியது. வாகனமோட்டிகளுக்கு உதவ கழக அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அது மேலும் கூறியது.
மாலை 6.30 மணியளவில் கழகம் வெளியிட்ட மற்றோர் அறிவிப்பில், கிராமட் லேனில் வெள்ளம் தணிந்துவிட்டதாகக் கூறியது.
சிங்கப்பூரின் தெற்கு, மேற்கு, மத்தியப் பகுதிகளில் மாலை 5.45 மணி முதல் 6.45 மணிவரை கனமழை எதிர்பார்க்கப்படுவதாக கழகம் சொன்னது.
மாலை 5.58 மணிக்கும் 6.08 மணிக்கும் இடையில், தீவின் மற்ற பகுதிகளில் திடீர் வெள்ள எச்சரிக்கையைக் கழகம் விடுத்தது.
கேம்பிரிட்ஜ் சாலை, கெங் லீ சாலை அருகே புக்கிட் தீமா கால்வாய், மெக்கென்ஸி சாலை, பாலஸ்டியர் சாலை, தாம்சன் சாலை, அப்பர் சிராங்கூனில் உள்ள புவெய் ஹீ அவென்யூ, சியாக் கியூ அவென்யூ உள்ளிட்ட இடங்கள் அவற்றில் அடங்கும்.

