சிங்கப்பூரில் கூடுதல் நாள் தங்கிய குற்றம்: ஐந்து ஆடவர்கள் கைது

சிங்கப்பூரில் கூடுதல் நாள் தங்கிய குற்றம்: ஐந்து ஆடவர்கள் கைது

fallback

13 Apr 2023 - 10:13 am

1 mins read

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய (ஐசிஏ) அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட சிங்கப்பூரில் கூடுதல் நாள்கள் தங்கிய குற்றங்களுக்காக ஐந்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது வருகை அனுமதி அட்டைகளும் (visit passes) வேலை அனுமதிச்சீட்டும் (work permit) காலாவதியாகியும் அவர்கள் சிங்கப்பூரில் தங்கி, தச்சுப் பணியில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஐசிஏ வியாழக்கிழமை (ஏப்ரல் 13) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

23 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட அந்த பங்ளாதேஷ் நாட்டவர்கள், ஏப்ரல் 4ஆம் தேதி அதிகாலை கிம் சுவான் சாலையில் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட கூடுதல் நாள்கள் தங்குவதை தான் கடுமையான குற்றமாகக் கருதுவதாக ஐசிஏ கூறியது.

"சிங்கப்பூரின் பாதுகாப்பை உறுதிசெய்ய கடப்பாடு கொண்டுள்ள ஐசிஏ, குடிநுழைவுக் குற்ற நிலவரத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உள்நாட்டு அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்," என்று ஆணையம் சொன்னது.

அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட சிங்கப்பூரில் கூடுதல் நாள் தங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் குறைந்தது மூன்று பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.