டன்னர்ன் ரோட்டின் 450 மீட்டர் பகுதி உயர்த்தப்படும்

டன்னர்ன் ரோட்டின் 450 மீட்டர் பகுதி உயர்த்தப்படும்

2 mins read
Google News Preferred Icon

பொதுப் பயனீட்டுக் கழகம், டன்னர்ன் ரோட்டின் 450 மீட்டர் பகுதியை உயர்த்தவிருக்கிறது. அந்தப் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பது அதன் நோக்கம் என்று கழகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை டன்னர்ன் ரோட்டுப் பகுதியில் மூன்று முறை வெள்ளம் ஏற்பட்டது. சாலைப் பகுதியை உயர்த்தும் பணிகள் இந்த ஆண்டு நவம்பரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாலை எந்த அளவுக்கு உயர்த்தப்படும் என்பது போன்ற விவரங்கள் இன்னமும் துல்லியமாக முடிவு செய்யப்படவில்லை.

இந்தப் பணி தற்காலிக ஏற்பாடாக இடம்பெறுகிறது. புக்கிட் தீமா பகுதியில் இப்போது நடந்து வரும் வடிகால் விரிவாக்க வேலைகள் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முடிவடையும்.

புக்கிட் தீமா கால்வாயின் 900 மீட்டர் பகுதியை அகலமாகவும் ஆழமாகவும் ஆக்கும் இந்த வடிகால் மேம்பாட்டுத் திட்டம் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவும் என்று கழகம் கூறியது.

இந்த வடிகால் பணி முடிவடையும்போது டன்னர்ன் ரோடு உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் நிலைமை மேம்பட்டு வெள்ளம் ஏற்படாமல் பாதுகாப்பு மேம்படும் என்று கழகம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 24ஆம் தேதி பெய்த கடும் மழை காரணமாக டன்னர்ன் ரோட்டில் சிம் டெர்பி சென்டருக்கும் பிஞ்சாய் பார்க்குக்கும் இடையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அன்று சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் 3 மணி நேரம் பெய்த மழை, ஆகஸ்ட் மாதத்திற்கான சராசரி அளவைவிட அதிகமாக இருந்தது.

இந்த ஆண்டு ஜூலை 12ஆம் தேதியும் ஏப்ரல் 17ஆம் தேதியும் பெய்த கடும் மழை காரணமாக டன்னர்ன் ரோட்டில் வெள்ளம் ஏற்பட்டது.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்