அமெரிக்கப் படைகள் வெளியேறியதும் நேற்று அதிகாலை முதலே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் முழுவதும் தலிபான்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வானத்தை நோக்கிச் சுட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 2001ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டு இருந்த அமெரிக்கப்படை, அதிபர் ஜோ பைடன் வகுத்த இலக்கின்படி நேற்று (ஆகஸ்ட் 31) வெளியேறியதைத் தொடர்ந்து வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.
20 ஆண்டு காலப் போர் முடிவுக்கு வந்ததையும் இந்தக் கொண்டாட்டம் குறிக்கிறது.
திங்கள் நள்ளிரவைத் தொட ஒரு நிமிடம் இருந்த வேளையில் ஆகக் கடைசி அமெரிக்க வீரர் காபூல் விமான நிலையத்தை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் விமான நிலையத்திற்குள் நுழைந்த தலிபான் போராளிகள் அதனை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தலிபான் இயக்கம் வெளியிட்ட காணொளிப் படம் ஒன்று அமெரிக்கப் படை வெளியேறியதையும் தலிபான் போராளிகள் நுழைவதையும் காட்டியது.
ஆகக் கடைசி அமெரிக்க வீரர் காபூல் விமான நிலையத்திலிருந்து கிளம்பியதும், "ஆப்கானிஸ்தான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டது," என்று குவேரி யூசுஃப் என்னும் தலிபான் பேச்சாளர் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்ததாக அல் ஜஸீரா தொலைக்காட்சி தெரிவித்தது.
20 ஆண்டுகாலமாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட வந்த அமெரிக்காவின் நேட்டோ கூட்டணிப் படையினர் தலிபான்களுக்கு எதிராக சண்டையிட்டு வந்தனர். இதில் கிட்டத்தட்ட 2,500 அமெரிக்க ராணுவ வீரர்களும் சுமார் 240,000 ஆப்கான் மக்களும் உயிரிழந்துவிட்டனர். தலிபான்கள் தரப்பில் 10,000 பேர் வரை மாண்டதாகக் கூறப்பட்டது. அமைதியை நிலைநாட்டவும் போரைச் சமாளிக்கவும் $2 டிரில்லியன் டாலர் (S$2.7 டிரில்லியன்) வரை செலவானதாக மதிப்பிடப்படுகிறது.
தமது படையினர் முழுமையாக மீட்டுக்கொள்ளப்பட்ட பின்னர் நேற்று பின்னரேத்தில் அதிபர் பைடன், வாஷிங்டன் நகரிலிருந்து நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிைடயே, காபூலுடனான தூதரக உறவைத் தற்காலிகமாக முறித்துக்கொண்டு தூதரகப் பணிகளை கத்தாருக்கு மாற்றிவிட்டதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிலிங்கன் தெரிவித்தார்.
20 ஆண்டுக்குப் பின் அமெரிக்கப் படை வெளியேறியதும் ஆனந்தக் கூச்சல்

