'நான் இறந்துவிட்டேன் என நினைத்தேன்': 1972 துப்பாக்கிச்சூட்டில் கழுத்தில் சுடப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி

'நான் இறந்துவிட்டேன் என நினைத்தேன்': 1972 துப்பாக்கிச்சூட்டில் கழுத்தில் சுடப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி

2 mins read

அது நடந்தது 50 ஆண்டுகளுக்கு முன்பு. எனினும், பசுமரத்து ஆணிபோல அச்சம்பவம் திரு டேவி சானின் மனதில் இன்னமும் ஆழமாகப் பதிந்து இருக்கிறது. இது ஆச்சரியம் தரக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில், அச்சம்பவத்தில் இவர் உயிரிழக்கப் பார்த்தார்.

காவல்துறை அதிகாரியாக வேலையில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், அப்போது சிங்கப்பூரில் அதிகம் தேடப்பட்டு வந்த ஆடவர்களை திரு சான் நேருக்கு நேர் எதிர்கொள்ள நேரிட்டது. அப்போது இவருக்கு வயது 25. அந்த ஆடவர்களும் திரு சானும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

1972 அக்டோபர் 29ஆம் தேதி நடந்த அந்தத் துப்பாக்கிச்சூட்டில் திரு சானின் தோட்டா, முஸ்தஃபா ஹசன் எனும் சந்தேக நபரின் வயிற்றில் பாய்ந்தது. மாறாக, திரு சானின் கழுத்திலும் தோட்டா பாய்ந்தது.

-

இப்போது 75 வயதாகும் திரு சான், தமக்கு நேர்ந்த அச்சம்பவம் குறித்து சண்டே டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.

"நான் தரையில் விழுந்தேன். எனக்கு ஏற்பட்ட வலியை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. எனது துப்பாக்கியை எடுத்து சுட முற்பட்டேன். ஆனால், என்னால் அசையவே முடியவில்லை. நான் இறந்துவிட்டேன் என நினைத்தேன்," என்று இவர் நினைவுகூர்ந்தார்.

கடந்த புதன்கிழமை (மார்ச் 23) பென்டமியர் சாலையில் நிகழ்ந்த சம்பவத்தை திரு சான் கேள்விப்பட்டபோது, 1972ஆம் ஆண்டில் இவருக்கு ஏற்பட்ட சம்பவத்தின் நினைவலைகள் இவர் கண்முன் நிழலாடின.

கடந்த வாரச் சம்பவத்தில், கத்தி ஏந்திய ஆடவர் ஒருவரைக் காவல்துறை அதிகாரிகள் சுட்டதில் அவர் உயிரிழந்தார். அதிகாரிகள் கத்தியைக் கீழே போடச் சொல்லியும் அதற்கு அவர் இணங்கவில்லை. 'டேசர்' கருவியால் அதிகாரிகள் அவரை மூன்று முறை சுட்டும் கட்டுப்படாமல் அவர்களை நோக்கி அந்த ஆடவர் சென்றதால் அவர் சுடப்பட்டார். துப்பாக்கிக் குண்டு அவரது நெஞ்சுப் பகுதியில் பாய்ந்தது. அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டது.

1967 முதல் 1979 வரை காவல்துறை அதிகாரியாக இருந்த திரு சான், "காவல்துறையினராக, உயிரையும் சொத்தையும் பாதுகாப்பதே எங்களது கடமை. பொதுமக்களைப் பாதுகாக்க நாங்கள் பயிற்சி பெற்றுள்ளோம்," என்றார்.

சந்தேக நபர்களைக் கையாளும்போது காவல்துறையினர் கவனமாகச் செயல்பட வேண்டும் என்று திரு சான் சொன்னார்.

"அப்படி இல்லையெனில், அதிகாரிகள் தங்களது உயிரை இழக்கக்கூடும், அல்லது அப்பாவி மக்கள் கொல்லப்படக்கூடும்," என்று இவர் கூறினார்.

"நான் காவல்துறை அதிகாரியாக இருந்தபோது, பணி முடிந்து தினமும் வீடு திரும்புவேன் என எதிர்பார்க்கவில்லை. அன்றைய தினம் நான் சுடப்பட்டபோது, நான் வீடு திரும்பமாட்டேன் என நினைத்தேன். நல்ல வேளையாக, நான் திரும்பினேன்," என்றார் திரு சான்.