சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், தான் பதவியையோ அந்தஸ்தையோ அதிகாரத்தையோ ஒருபோதும் நாடியதில்லை என்று கூறியுள்ளார்.
அதற்குப் பதிலாக தன்னிடம் ஒப்படைக்கப்படும் எந்தவொரு பொறுப்பையும் தலைசிறந்த முறையில் நிறைவேற்றுவதே தமது நோக்கம் என்று அவர் கூறினார்.
"என்னால் முடிந்த தலைசிறந்த முறையில் பாடுபடுவேன். ஏதாவது குறை அப்போதைக்கு அப்போது வரலாம். அப்படி ஒரு நிலை ஏற்படும்பட்சத்தில் பலவற்றையும் கற்றுக்கொள்ள நான் முயல்வேன்.
"என்னை மேம்படுத்திக்கொள்வேன். இன்னும் சிறந்த முறையில் சேவையாற்ற முயற்சிகளை மேற்கொள்வேன்," என்று திரு வோங் தெரிவித்தார்.
மசெகவின் நான்காம் தலைமுறைத் (4ஜி) தலைவராக திரு வோங் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதன் தொடர்பில் இஸ்தானாவில் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 16) செய்தியாளர் கூட்டம் நடந்தது.
அதில் பேசிய திரு வோங், தன் வாழ்வில் ஆகப்பெரிய பொறுப்பை தான் இப்போது மேற்கொள்வதாகவும் இந்த நிலையில், அந்தக் கோட்பாடுகளே தனக்கு தொடர்ந்து வழிகாட்டும் என்றும் உறுதிபட கூறினார்.

