அலகுகளை உடலில் குத்திக் கொண்டு, வண்ண மயில்தோகையுடன் அலங்கரிக்கப்பட்ட காவடிகளைச் சுமந்தபடி பக்தர்களின் காவடி ஆட்டம், சிராங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் இருந்து தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோவில் வரை கிட்டத்தட்ட 3 கி.மீ. தூர ஊர்வலம், மேளதாளம் - இவையெல்லாமின்றி அமைதியான முறையில் தைப்பூசத் திருவிழா இன்று நடந்தேறியது.
ஏறத்தாழ 60 ஆண்டுகளாக பால்குடம் செலுத்தி வரும் பக்தர் திரு சுப்பையா பிள்ளை, 79, இந்த முறை ஆக அமைதியான வழிபாடாக இருந்தது என்றார்.
"தைப்பூசம் என்றாலே மக்கள் கூட்டமாக வந்து வழிபட்டு ஒரே பரபரப்பாக இருக்கும். இவ்வாண்டு மிகவும் அமைதியாக இருந்தது. இருப்பினும் பக்தி உணர்விற்குக் குறைவில்லை. கொவிட்-19 பரவலால் பல நாடுகளில் தைப்பூசத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கு பால்குடம், சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது நமக்குக் கிட்டிய நல்வாய்ப்பு," என்றார் அவர்.
பால்குட அபிஷேகமும் சுவாமி வழிபாடும் மட்டுமே அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலில் இடம்பெற்றன. கிட்டத்தட்ட 5,000 பக்தர்கள் பதிவுசெய்து பால்குடம் செலுத்தினர். ஏறத்தாழ 10,000 பக்தர்கள் கோவிலுக்கு வருகைபுரிவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலை 6 மணி வரை 7,000 பேர் வந்து சென்றதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
பால்குடம் எடுத்தவர்களுக்கும் வழிபாடு மட்டும் செய்ய வந்தோருக்கும் தனித்தனிப் பாதைகள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் முறையாக வரிசைப்படுத்தப்பட்டனர். அதிகபட்சம் அரைமணி நேரத்தில் பக்தர்கள் தங்களது வழிபாடுகளை முடித்துச் சென்றனர்.
நேற்று நள்ளிரவு தொடங்கிய தைப்பூசத் திருவிழா நேற்றிரவு 10 மணியளவில் நிறைவு பெற்றது. தைப்பூசத் திருவிழா சிறந்த ஏற்பாடுகளுடன் சுமுகமாக நடந்தேறியதாக பக்தர்கள் சிலர் தமிழ் முரசிடம் தெரிவித்தனர். சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங், சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா ஆகியோர் வெவ்வேறு நேரங்களில் கோவிலுக்கு வந்து சென்றனர்.

