திரு ஜேசன் டான் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 10) காலை தூக்கத்திலிருந்து தாமதமாக கண்விழித்தார். அன்றைய தினம் வேலைக்குப் போக வேண்டாம் என அவருடைய கர்ப்பிணி மனைவி கூறினார்.
உணவு விநியோக ஊழியரான திரு டான், 24, ஓட்டுநர்களுக்கான ஊக்குவிப்புத் தொகையை ஈட்ட விரும்பினார். அதைப் பெற 13 ஆர்டர்களை மட்டுமே அவர் பூர்த்திசெய்ய வேண்டியிருந்தது.
ஆர்டர்களை நிறைவேற்ற கம்பாஸ் அவென்யூ வழியாக அவர் மோட்டார்சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
ஒரு வேன், இரண்டு மோட்டார்சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து பிற்பகல் 1 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.
இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு மோட்டார்சைக்கிளோட்டியான 20 வயது ஆடவர் ஒருவர், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
கவனக்குறைவாக வேனை ஓட்டி மரணம் விளைவித்ததாக 36 வயது ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திரு ஜேசன் டானின் சகோதரரான திரு ஜெரமி டான், 33, தம்முடைய சகோதரரின் திடீர் மரணத்தைக் கேள்விப்பட்டு தம்முடைய குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருப்பதாக ஸ்ட்ரெய்ஸ் டைம்சிடம் கூறினார். இன்னும் ஐந்தாறு மாதங்களில் தந்தையாகவிருந்தார் திரு ஜேசன் டான்.
உட்லண்ட்சில் தம்முடைய சகோதரரின் கண்விழிப்புச் சடங்கில் பேசிய திரு ஜெரமி டான், "பொதுவாக அவருடைய மனைவி வாரயிறுதியில் வேலைக்குச் செல்லவில்லை என்றால், என்னுடைய சகோதரரும் அன்றைய தினம் விடுப்பு எடுத்துக்கொள்வார்.
"ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குப் பதிலாக 9 மணிக்கு என்னுடைய சகோதரர் எழுந்ததால், வேலைக்குச் செல்ல வேண்டாம் என அவருடைய மனைவி அவரிடம் கூறினார்,
"எனினும், வேலைக்குச் சென்று ஆர்டர்களை நிறைவேற்றினால் ஊக்குவிப்புத் தொகை கிடைக்கும் என்பதால் அவர் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தார். அவருக்குக் குழந்தை பிறக்கப் போவதால் கூடுதல் வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என அவர் நினைத்தார்," என்று கூறினார்.
ஃபுட்பாண்டா நிறுவனத்துக்காக முழுநேர உணவு விநியோக ஓட்டுநராக ஒரு சில ஆண்டுகளாக தம்முடைய சகோதரர் பணியாற்றி வந்ததாகச் சொன்ன திரு ஜெரமி டான், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் சொந்த வீட்டை வாங்க அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறினார்.
இந்த விபத்து குறித்து கருத்துரைத்த ஃபுட்பாண்டா நிறுவனப் பேச்சாளர் ஒருவர், "எங்களுடைய ஓட்டுநரின் மரணம் எங்களுக்கு மிகுந்த சோகம் அளித்துள்ளது. அவருடைய குடும்பத்துக்கு ஆதரவளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்து வருகிறோம். அதே வேளையில், விசாரணைக்காக காவல்துறைக்குத் தேவைப்படும் தகவலை வழங்கவும் நாங்கள் உதவி வருகிறோம்," என்றார்.

