மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று (ஆகஸ்ட் 21) பிற்பகல் பதவியேற்றார்.
அம்னோ கட்சியின் துணைத் தலைவரான அவர், வரலாற்று சிறப்புமிக்க 2018 பொதுத் தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது பிரதமராவார்.
2018 தேர்தலின்போது, 61 ஆண்டுகளில் முதன்முறையாக அம்னோ தலைமையிலான தேசிய முன்னணிக் கூட்டணி ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தது.
எனினும், கடந்த ஆண்டின் தொடக்கத்தில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, அம்னோவை சேர்ந்த ஒருவர் ஒருவாரியாக பிரதமர் பதவியை ஏற்றுள்ளார்.
தேசிய அரண்மனையில் மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷா முன்னிலையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு திரு இஸ்மாயில் பதவியேற்றார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததைத் தொடர்ந்து ஐந்து நாள்களுக்கு முன்பு திரு முகைதீன் யாசின் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
திரு முகைதீனைப் போலவே, குறுகிய பெரும்பான்மையுடன் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியை திரு இஸ்மாயில் வழிநடத்துவார். நாடாளுமன்றத்தில் உள்ள 220 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 114 பேரின் ஆதரவை திரு இஸ்மாயில் பெற்றுள்ளார்.
மாறாக, 105 உறுப்பினர்களின் ஆதரவை எதிர்கட்சி பெற்றுள்ளது.
அம்னோ கட்சியின் மற்றொரு மூத்த உறுப்பினரான திரு ரஸாலி ஹம்ஸா, திரு இஸ்மாயிலுக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டார்.
தற்போதைய கொவிட்-19 சூழல் மற்றும் பொருளியல் நெருக்கடியிலிருந்து மலேசியாவை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துவதே திரு இஸ்மாயிலின் உடனடி பணியாகும்.

