தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியா வெள்ளம்: உயரும் பலி எண்ணிக்கை; தொடரும் கனமழை

2 mins read

மலேசியாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் குறைந்தது 14 பேர் மாண்டிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

சிலாங்கூரின் ஷா அலாமில் மட்டும் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து 9 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களில் மூவர் பெண்கள், ஆறு பேர் ஆண்கள்.

பாஹாங்கின் பெந்தோங் அருகே உள்ள 'ஷெலே' தங்கும் விடுதியில் காணாமல் போன பெண்ணின் சடலம், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 21) அன்று காலை மீட்கப்பட்டது.

அதில் இன்னும் இருவரைக் காணவில்லை. அவர்கள் மாண்ட பெண்ணின் கணவரும் மகனும் ஆவர் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் வெள்ளப் பேரிடரைக் கையாள்வதில் குறைகள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால் அரசாங்கம் தன் செயல்பாடுகளை அவ்வப்போது மேம்படுத்திக் கொள்ளும் என்றார் அவர்.

வெள்ளப் பேரிடரைக் கையாளும் பணி மத்திய அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல. அதில் மாநில அரசாங்கங்களுக்கும் மாவட்ட அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளது என்று திரு இஸ்மாயில் கூறினார்.

குறிப்பாக வெள்ளப் பேரிடர் மீட்புப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதை, சிலாங்கூரில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதைப் பல தரப்புகள் குறைகூறியுள்ளன.

-

இவ்வேளையில், பாஹாங்கில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுவர்கள் எண்ணிக்கை சுமார் 39,000 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால் திரங்கானு, கிளாந்தான், மலாக்கா போன்ற இடங்களில் வெள்ளம் வடிந்ததை அடுத்து, பலரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

எனினும், வெள்ளம் வடிந்த இடங்களில் பாதுகாப்புக் கருதி மீண்டும் மின்சார வசதியைச் செய்துதர காலம் எடுக்கும் என்று மலேசியாவின் மின்சார வாரியமான டிஎன்பி கூறியது.

வெள்ள நிவாரணப் பணிகளில் போலிசைச் சேர்ந்த 7,000 பேர் ஈடுபடுவர் என்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 21) அன்று கூறப்பட்டது.

ராணுவத்தைச் சேர்ந்த 919 பேரும் உதவி வருகின்றனர்.

குறிப்பாக சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கோலாலம்பூர், பாஹாங், பேராக் உள்ளிட்ட மாநிலங்களில் ராணுவத்தார் உதவி செய்வர் என்று மலேசிய ராணுவத்தின் தலைவர் அஃபென்டி புவாங் கூறினார்.

இதற்கிடையே, பெர்லிக், கெடா, பினாங்கு, பேராக்கின் சில வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 21) தொடர் மழை பெய்யும் என்று மலேசியா வானிலை ஆய்வுத் துறை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியது.

தொடர்மழையாலும் கடும் மழையாலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அது எச்சரித்தது.