ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்ற துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்

ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்ற துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்

2 mins read

கித்தார் இசைக்கலைஞர், டிக்டாக் பிரபலம், என பல பரிமாணங்கள் உள்ள துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தற்போது புதுத் திறனை வெளிக்காட்டியுள்ளார்.

ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 ரக மோட்டார்சைக்கிளை ஓட்டி சிறுவர் புற்றுநோய் அறக்கட்டளைக்காக அவர் நன்கொடை திரட்டினார்.

நன்கொடை திரட்டுக்கு ரைடர்ஸ் எயிட் சிங்கப்பூர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 14) அன்று பிற்பகல் ஒரு மணி அளவில் தொடங்கியது.

தெம்பனீஸ் கனரக வாகன நிறுத்துமிடத்தில் தொடங்கிய வாகன ஓட்டத்தில் 700க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் கலந்துகொண்டனர்.

ரைடர்ஸ் எயிட் சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் திரு சூரிய குமார், இதுவரை 30,000 வெள்ளி நன்கொடை திரட்டப்பட்டதாகக் கூறினார்.

வாகன ஓட்டத்தில் பிற்பகல் 1.45 மணி அளவில் நிதி அமைச்சருமான திரு வோங் சேர்ந்துகொண்டார்.

-

பாசிர் ரிஸ்ஸில் உள்ள அல்-இஸ்திக்ஃபர் பள்ளிவாசலிலிருந்து லோயாங்கில் உள்ள துவா பேக் கோங் சீன ஆலயம் வரையில் மற்றவர்களுடன் சேர்ந்து திரு வோங் சென்றார்.

பின்னர் துவா பேக் கோங் ஆலயத்தில் பேசிய அவர், பல்லாண்டுகளுக்குப் பின்னர் மோட்டார்சைக்கிள் ஓட்ட தமக்கு வாய்ப்பு கொடுத்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கூறினார்.

மோட்டார்சைக்கிள் ஓட்டி இருபது ஆண்டுகள் ஆவதாகவும் கடைசியாக அமெரிக்காவில் மாணவராக இருந்தபோதுதான் தாம் அதை ஓட்டியதாகவும் அவர் கூறினார்.

-
-

திரு வோங் இளமைக்காலத்தில் மோட்டார்சைக்கிள் ஓட்டுவார் என்று கேள்விப்பட்ட பின்னர் அவரைத் தொடர்புகொண்டதாக திரு சூரியகுமார் கூறினார்.

"வழக்கமாக, நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் பின்னால் அமர்ந்துசெல்வார்கள். ஆனால் திரு வோங் தாமே மோட்டார்சைக்கிளை ஓட்ட விருப்பம் தெரிவித்தபோது எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கிடைத்தது," என்று திரு சூரியகுமார் விவரித்தார்.

-