விபத்து நிகழ்ந்த இடத்தில் அஞ்சலி; விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ முற்பட்ட மாது தொடர்ந்து கவலைக்கிடம்

2 mins read

பூக்கள், துணிகள், புகைப்படம் போன்றவை தஞ்சோங் பகாரில் நேற்று நிகழ்ந்த அகோர விபத்து நிகழ்ந்த இடத்தில் வைத்து, அந்த விபத்தில் இறந்த ஐவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

நேற்று அதிகாலை வேளையில் பிஎம்டபள்யூ கார் ஒன்று அந்தப் பகுதியில் இருந்த கடைவீடு ஒன்றின் மீது மோதி வெடித்து தீக்கிரையானது.

Watch on YouTube

சம்பவம் நடத்த இடத்துக்கு இன்று காலை 7.45 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் சென்றபோது, விபத்தில் எரிந்துபோன கடையின் முகப்பில் ஒரு சிறுவனின் பழைய புகைப்படம், உடைகள், காலணிகள் போன்றவை காணப்பட்டன.

கடையின் முன்புறத்திலும் பக்கவாட்டிலும் மலர்கள், ஏற்றி வைத்த மெழுகுவர்த்திகள், இரங்கல் செய்திகள் போன்றவை காணப்பட்டன.

விபத்து நிகழ்ந்த இடத்தை உலோக உத்தரங்களைக் கொண்டு மூடும் பணிகள் இன்று காலை மேற்கொள்ளப்பட்டன. விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உறவினர்கள், நண்பர்கள் அங்கு வந்து மரியாதை செலுத்திக்கொண்டிருந்தனர்.

Watch on YouTube

விபத்தில் உயிரிழந்த ஐவரும், அவர்களைக் காப்பாற்றும் செயலில் ஈடுபட்டு, படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாதும் முன்பு அவிவா நிதி ஆலோசப் பிரதிநிதிகளாகப் பணிபுரிந்தவர்கள்.

வாகனத்தை ஓட்டியவரின் பெயர் ஜொனத்தன் லொங். அவருடன் பயணித்தவர்களின் பெயர்கள் கேரி வொங் கொங் சியே, 29, இயுஜின் யப், 29, எல்வின் டான் யொங் ஹாவ்,28, டியோ சீ சியாங், 26.

திரு ஜொனத்தன் லொங்கின் தோழியான திருவாட்டி ரேபி ஓ சியூ ஹுவே, 26, விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவதற்காக காரின் கதவைத் திறக்க முயன்றார்.

அவரும் சுமார் 80% தீக்காயங்களுக்கு உள்ளானார்.

திருவாட்டி ஓ, சில காலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிப்பந்தியாகவும் பணியாற்றியவர். திருவாட்டி ஓ மலேசியாவில் பிறந்தவர் என ஊடகச் செய்தி குறிப்பிட்டது. பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்ற அவர், 16 வயதிலேயே குடும்பப் பாரத்தைக் குறைக்கும் பொருட்டு, 'கெத்தாய்' கலைஞராகப் பணிபுரியத் தொடங்கியதாகக் கூறப்பட்டது.

ஜொனத்தனும் ரேபியும் அண்மையில் வீடு ஒன்றுக்காக விண்ணப்பித்திருந்ததாகவும் கூறப்பட்டது.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் உடற்கூறு ஆய்வக ஊழியர் ஒருவர், அந்தக் கட்டடம் மூடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த அறுவரின் நண்பர் ஒருவர், மரபணு சோதனைகள் நிறைவுறும் வரை இறுதிச்சடங்கு நடைபெறாது எனத் தெரிவித்தார். அவர்களது உடல்களை போலிசார் வழங்க சில நாட்கள் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதல்கட்ட விசாரணை அறிக்கையின்படி, கார் ஓட்டுநர் அதிவேகமாக அச்சாலையில் காரை ஓட்டிச்சென்றதாக நம்பப்படுவதாகவும் அக்கார் கடைவீட்டின் மீது மோதி வாகனம் தீ பிடித்துக்கொண்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்
விபத்து