அப்பர் புக்கிட் தீமா வட்டாரத்தில் உள்ள கால்வாயில் மாண்டுகிடந்த 11 வயது இரட்டைச் சகோதரர்களின் தந்தை, அவர்களின் சடலங்கள் கண்டு எடுக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
தமது மகன்களில் ஒருவரான ஈத்தன் யாப் ஈ செர்னைக் கொலை செய்ததாக கடந்த திங்கள் அன்று சேவியர் யாப் ஜூன் ஹூன், 48, மீது குற்றம் சாட்டப்பட்டது.
உயிரிழந்த மற்றொரு மகன் ஆஸ்ட்டன் யாப் காய் ஷெர்ன் என்று கூறப்பட்டது.
கிரீன்ரிட்ஜ் கிரசென்ட் விளையாட்டு இடத்தின் அருகே உள்ள கால்வாய்க்கு யாப் வியாழன் (ஜனவரி 27) அன்று அழைத்துச் செல்லப்பட்டார்.
கருப்பு வேனில் வந்திறங்கிய அவரது கைகளில் விலங்குகள் பூட்டப்பட்டிருந்தன. அவரைச் சுற்றி சுமார் 5 காவல் துறை அதிகாரிகள் இருந்தனர்.
வெளியாட்கள் நுழைவதைத் தடுக்க, கால்வாயைச் சுற்றிய இடத்தை போலிசார் தடுத்திருந்தனர்.
பின்னர் அந்த இடத்தில் அவர்கள் அம்புக் குறிகளையும் வைத்தனர்.
ஓர் அம்புக்குறியை கால்வாய் அருகே இருக்கும் விளையாட்டு இடத்தில் உள்ள உடற்பயிற்சி சாதனம் அருகேயும் வைத்தனர்.
மற்றொரு அம்புக்குறியை கால்வாய் அருகே பின்னர் வேறு ஒரு அம்புக்குறியை கால்வாய்க்கு இறங்கிச் செல்லும் படிகட்டுகளிலும் காவல் துறை அதிகாரிகள் வைத்தனர்.
பின்னர் போலிசார் அவரைக் கால்வாய்க்குள் அழைத்துச் சென்றனர்.
சுமார் 35 நிமிடங்கள் அவர்கள் அங்கு இருந்தனர்.
பின்னர் யாப் கருப்பு வேனில் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை இரு சிறுவர்களின் சடலங்கள் அந்தக் கால்வாயில் கண்டு எடுக்கப்பட்டன.
போலிசாரை உதவிக்காக அன்று அழைத்திருந்த யாப், மறுநாள் கைது செய்யப்பட்டார்.
உயிரிழந்த சிறுவர்கள் சிறப்புத் தேவை உள்ளவர்கள் என்று நம்பப்படுகிறது.