பார்ட்லி சாலையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 28) நிகழ்ந்த விபத்தில் 14 வாகனங்கள் சிக்கின.
இந்த விபத்து குறித்து இரவு 7.05 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை குடிமைத் தற்காப்புப் படை உறுதிப்படுத்தியது.
சிங்கப்பூர் ரோடு ஃபேஸ்புக் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களில், சாலையின் வலது தடத்தில் 13 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி நின்றது தெரிந்தது. அவற்றுக்குப் பின்னால், சாலையின் நடு தடத்தில் வாகனம் ஒன்று காணப்பட்டது.
ஒரே விபத்தில் இத்தனை வாகனங்கள் சிக்குவது வழக்கத்திற்கு மாறானது.
கடந்த அக்டோபரில் காலாங் பாய லேபார் விரைவுச்சாலையில் ஒன்பது வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் காயமுற்ற 14 வயதுச் சிறுமியும் 40 வயது மாதும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கடந்த ஜூன் மாதம் தீவு விரைவுச்சாலையில் ஏழு வாகனங்கள் சிக்கிய விபத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.