சிங்கப்பூரில் 16 வகை பூச்சியினங்களை உணவாக விற்க அனுமதி வழங்கப்படும்

1 mins read
30d34028-9c6f-44d8-9efb-5aac11dbd407
உலக மக்கள்தொகை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், கட்டுப்படியான விலையில் அவர்களுக்கு உணவளிக்கும் முயற்சியாக, ஐநா உணவு, வேளாண் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக மனிதர்கள் பூச்சிகளை உணவாகக் கொள்ள வேண்டும் என ஊக்குவித்து வருகிறது. படம்: பிக்சபே -

சிள்வண்டு, பட்டுப்புழு உள்ளிட்ட 16 வகை பூச்சியினங்களை உணவாக விற்க சிங்கப்பூர் உணவு அமைப்பு இவ்வாண்டின் பிற்பகுதியில் அனுமதி வழங்கும்.

அவை உணவகங்களில் நேரடியாகவோ அல்லது வறுத்த பண்டங்களாவோ அல்லது புரதக்கட்டிகளாகவோ விற்கப்படலாம்.

உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின் அடிப்படையில் அந்தப் பூச்சி உணவுவகைகளுக்கு அனுமதி வழங்கப்படும். நோய்க்கிருமிகளைக் கொல்லும் செயல்முறைகள், கெடாமல் பாதுகாப்பாக சேமித்து வைத்தல் உள்ளிட்டவை அவ்விதிமுறைகளில் அடங்கும்.

பூச்சிகளை உணவாகக் கொள்வது தொடர்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதிவரை பொதுமக்களுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டது.

இதன் தொடர்பில் அறிவியல் மறுஆய்வும் மேற்கொள்ளப்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு கடந்த அக்டோபரில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்திருந்தது.

உலக மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கட்டுப்படியான விலையிலும் தாக்குப்பிடிக்கத்தக்க வழியிலும் மக்களுக்கு உணவளிக்கும் முயற்சியாக, ஐக்கிய நாட்டு உணவு, வேளாண் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக மனிதர்கள் பூச்சிகளை உணவாகக் கொள்ள வேண்டும் என ஊக்குவித்து வருகிறது.