ஆயுதமேந்தித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட 18 வயது சிங்கப்பூரர் கைது

ரச்சனா வேலாயுதம்

 

சுயதீவிரவாதப் போக்கிற்கு மாறிய 18 வயது சிங்கப்பூர் மாணவர் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டார்.

முகம்மது இர்ஃபான் டன்யால் முகம்மது நோர் என்ற அந்த இளையர் ‘ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பிற்கு ஆதரவாக சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் ஆயுதமேந்தி தாக்குதல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தார்.

ஸாகிர் நாயக், அகமது டீடத் போன்ற சமயத் தீவிரவாத போதனையாளர்களின் யூடியூப் காணொளிகளைக் கண்டு, அவர் சுயதீவிரவாதப் போக்கிற்கு மாறியதாகக் கூறப்பட்டது.

இதன் தொடர்பில் ஜூ சியாட்டில் உள்ள காலித் பள்ளிவாசலில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம்.

“வன்முறையில் இறங்குவது என்று இர்ஃபான் உறுதியுடன் இருந்தார். எங்களது மதிப்பீட்டின்படி, அவர் கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பிருந்ததாகக் கருதுகிறோம். அவர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கருதியதால் அவரைக் கைதுசெய்தோம்,” என்று அமைச்சர் சண்முகம் கூறினார்.

முஸ்லீம் அல்லாட்ஹோர், ஷியா முஸ்லிம், சுஃபி முஸ்லிம் ஆகியோரைக் குறிவைத்துத் தாக்கத் திட்டமிட்ட இர்ஃபான், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு கத்தியை வாங்கினார். 

அத்துடன், அங் மோ கியோவில் தேசிய சாரணர் படையின் தலைமையகம் அமைந்துள்ள அமோய் குவீ முகாமிலும் தாக்குதல் நடத்தி, பெரும் உயிருடற்சேதத்தை விளைவிக்க அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டது. 

“தமது திட்டங்களில் ஏதேனும் ஒன்றை அவர் செயல்படுத்தியிருந்தால் உயிருடற்சேதம், சமயங்களுக்கு இடையிலான அவநம்பிக்கை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கக்கூடும்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இர்ஃபான் தனியாகச் செயல்பட்டார் என்றும் மற்றவர்களைத் தன்பக்கம் இழுக்கும் அல்லது சுயதீவிரவாதப் போக்கிற்கு மாற்றும் அவரது முயற்சிகள் கைகூடியதற்கான அறிகுறி தெரியவில்லை என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்தது.

“கடந்த 2015ஆம் ஆண்டுமுதல், 20 வயதுக்கும் குறைந்த ஒன்பது பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். இப்போக்கு மிகவும் கவலை தருவதாக உள்ளது. எனினும், அந்த இளையர்கள் வன்முறைப் போக்கைக் கைவிடவும் அவர்களை சமூகத்துடன் ஒன்றிணைக்கவும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு, சமூக அமைப்புகளுடன் இணைந்து பெருமுயற்சிகளை எடுத்து வருகிறது,” என்று திரு சண்முகம் சொன்னார்.

rachv@sph.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!