பத்து ஆண்டுகளில் எல்ஆர்டி தண்டவாளத்தில் விழுந்து இருவர் மரணம்

பத்து ஆண்டுகளில் எல்ஆர்டி தண்டவாளத்தில் விழுந்து இருவர் மரணம்

1 mins read
3f1413ac-5f97-45c4-aaa0-e8af09665e18
பொங்கோல் ஈஸ்ட் எல்ஆர்டி திரும்புத் தடத்தில் கோவ் நிலைய நடைமேடை அருகே தண்டவாளத்தில் மார்ச் 23ஆம் தேதி 33 வயது மாது ஒருவர் அசைவற்றுக் கிடந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கடந்த 10 ஆண்டுகளில் இலகு ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தார்.

போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

பொங்கோல் ஈஸ்ட் எல்ஆர்டி திரும்புத் தடத்தில் கோவ் நிலைய நடைமேடை அருகே தண்டவாளத்தில் கடந்த மார்ச் 23ஆம் தேதி 33 வயது மாது ஒருவர் அசைவற்றுக் கிடந்தார்.

அவர் மரணமடைந்துவிட்டதாக போக்குவரத்து அமைச்சு பின்னர் உறுதிப்படுத்தியது.

புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி தடத்தில் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. குடிபோதையில் இருந்த ஓர் ஆடவர் ஃபஜார் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இறங்கினார். அவர் ரயிலில் அடிபட்டுவிட்டார்.

பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி உறுப்பினர் இயோ வான் லிங்கிற்குப் பதில் அளித்துப் பேசிய டாக்டர் கோர், கூடுதல் பாதுகாப்புக்காக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த போக்குவரத்துச் சேவை நிறுவனங்கள் முயல்வதாகக் கூறினார்.

என்றாலும் இடப் பற்றாக்குறை காரணமாக எல்ஆர்டி நிலையங்களில் நடைமேடை கதவுகளைப் பொருத்துவது சிரமமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் ரயில் கட்டமைப்பை வடிவமைத்து நிர்வகித்து நடத்துவதில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றார் அவர்.