இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரு போர் விமானங்கள் பயிற்சியின்போது விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்துவிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை (ஜனவரி 28) காலை விமானப் படையின் விமானங்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகர விமான நிலையத்தில் இந்திய விமானப் படையின் விமானத் தளம் அமைந்துள்ளது.
சனிக்கிழமை காலை அங்கிருந்து இரண்டு விமானங்களில் மூன்று விமானிகள் பயிற்சிக்காகப் புறப்பட்டுச் சென்றனர்.
சுகோய்-30, மிராஜ்-2000 வகை போர் விமானங்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்நிலையில், நடுவானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்விரு விமானங்களும் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் இரு விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மற்றொரு விமானி உயிரிழந்துவிட்டார். அவரது உடல் பாகங்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து இந்திய விமானப்படைத் தலைவர், மத்திய தற்காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விளக்கமளித்ததாகவும் மீட்புப் பணிகள் குறித்து அறிக்கை அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் விபத்துக்குள்ளான போர் விமானங்களின் சிதைவுகள் விபத்து நடந்த இடத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் ராஜஸ்தானின் பரத்பூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

