உட்லண்ட்சில் உள்ள ஒரு கார்நிறுத்தப் பூங்காவில் திங்கட்கிழமை (மார்ச் 13) நடையர்கள் மூவர்மீது வேன் மோதியதில், இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்தது.
கவனக்குறைவுடன் வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதாகக் கூறி, 33 வயது வேன் ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.
அக்குழந்தையின் தந்தைதான் அந்த வேன் ஓட்டுநர் என்று அறியப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.
உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 32, புளோக் 326ல் நிகழ்ந்த இவ்விபத்து குறித்து பிற்பகல் 2.40 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
இரண்டு வயதுப் பெண் குழந்தை சுயநினைவின்றி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் பின்னர் அக்குழந்தை இறந்துவிட்டதாகவும் காவல்துறை கூறியது.
விபத்தில் சிக்கிய நான்கு வயதுச் சிறுவனும் 34 வயதுப் பெண்ணும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
அந்நால்வரும் ஒரே குடும்பத்தினர் என்றும் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பாக அவர்கள் அங்குள்ள ஒரு காப்பிக்கடையில் ஒன்றாக உணவருந்தினர் என்றும் சீன நாளிதழான சாவ்பாவ் தெரிவித்தது.
தள்ளுவண்டியில் இருந்து அந்த இரண்டு வயதுக் குழந்தை விழுந்துவிட்டதாகவும் வேன் பின்புறமாக இயக்கப்பட்டபோது அதன்மீது மோதிவிட்டதாகவும் குடியிருப்பாளர்கள் அந்நாளிதழிடம் கூறினார்.


