முதலீட்டுத் திட்டத்தின்கீழ் 200 பேருக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதி

முதலீட்டுத் திட்டத்தின்கீழ் 200 பேருக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதி

3 mins read
f0d60c37-a5d2-48fd-8103-cac54109c242
சிங்கப்பூரில் தொழிலைத் தொடங்கவும் இங்குள்ள வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் குறைந்தபட்சம் $2.5 மில்லியன் முதலீடு செய்யும் வெளிநாட்டினர் உலகளாவிய முதலீட்டாளர் திட்டத்தின்கீழ் நிரந்தர வாசத் தகுதி பெற விண்ணப்பிக்கலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் உலகளாவிய முதலீட்டாளர் திட்டத்தின் (ஜிஐபி) வாயிலாக மூன்றாண்டுகளில் கிட்டத்தட்ட 200 பேர் நிரந்தரவாசத் தகுதி பெற்றிருப்பதாக வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்றத்தில் இயோ சூ காங் தனித்தொகுதி உறுப்பினர் யிப் ஹான் வெங் எழுப்பிய வினாவுக்குப் பதிலளிக்கையில் அவர் இந்த விவரத்தைத் தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி எத்தனை பேர் நிரந்தரவாசத் தகுதி பெற்றனர் என்று திரு யிப் கேட்டிருந்தார். 2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 200 பேர் தகுதி பெற்றிருந்ததாக திருவாட்டி லோ கூறினார்.

சிங்கப்பூரில் தொழிலைத் தொடங்கவும் இங்குள்ள வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் குறைந்தபட்சம் $2.5 மில்லியன் முதலீடு செய்யும் வெளிநாட்டினர் உலகளாவிய முதலீட்டாளர் திட்டத்தின்கீழ் நிரந்தரவாசத் தகுதி பெற விண்ணப்பிக்கலாம்.

கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை பொருளியல் வளர்ச்சிக் கழகம் நிர்வகித்து வருகிறது.

விண்ணப்பிக்கத் தகுதி உடையோர் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் தொழில்முனைவு மற்றும் வர்த்தக அனுபவங்களைப் பெற்றிருத்தல் அவசியம். அத்துடன், இங்கு அவர்கள் நிறுவனம் ஒன்றை நடத்தி வரவேண்டும். விண்ணப்பிக்கும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் குறைந்தபட்சம் $200 மில்லியன் மதிப்பிலான வருடாந்திர வருமானம் பெற்றிருக்கவேண்டும்.

"இந்தத் திட்டம் 2011ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய $5.46 பில்லியன் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது. அதன்மூலம் இங்கு 24,000க்கும் மேற்பட்ட வேலைகள் உருவாக்கப்பட்டு உள்ளன," என்றார் திருவாட்டி லோ.

மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜிஐபி முதலீட்டாளர்கள் $1.62 பில்லியன் முதலீடுகளை இங்கு அங்கீகரிக்கப்பட்ட நிதித் திட்டங்களில் முதலீடு செய்ததாகவும் அவர் கூறினார். அந்தத் திட்டங்களின் நிர்வாகிகள் இந்த முதலீட்டில் $1.41 பில்லியனை நடப்பு முதலீட்டுத் திட்டங்களுக்கு வழங்கினர்.

இதில் கிட்டத்தட்ட 65.6 விழுக்காடு அல்லது $930 மில்லியன் தொகை சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் துணை அமைச்சர் தெரிவித்தார்.

பொருளியல் நடவடிக்கைகளுக்கும் முதலீட்டு ஊக்குவிப்புக்கும் பங்களிக்கக் கூடிய, வசதிபடைத்த தனிப்பட்டவர்களை ஈர்க்க அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற உலக நாடுகள் 'கோல்டன் விசா' திட்டத்தை செயல்படுத்துகின்றன. அந்த நாடுகளின் வரிசையில் சிங்கப்பூரும் இணைந்துள்ளது.

ஜிஐபி திட்ட முதலீட்டாளர்கள் இங்கு வேரூன்றப்படுவதையும் நாட்டின் பொருளியலுக்கும் வேலை உருவாக்கத்திற்கும் அவர்கள் பங்களிப்பதையும் உறுதி செய்ய பொருளியல் வளர்ச்சிக் கழகம் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நிரந்தரவாசத் தகுதிக்கு விண்ணப்பம் செய்வோர் அவர்கள் முதலீடு செய்துள்ள சிங்கப்பூர் நிறுவனம் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவற்றை பொருளியல் வளர்ச்சிக் கழகம் பரிசீலித்து நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை நேரில் கண்டறியும் என்றும் திருவாட்டி லோ கூறினார்.

இந்தத் திட்டத்தின்கீழ் நிரந்தரவாசத் தகுதி பெற்றவர்களில் எத்தனை பேர் குடியுரிமை பெற்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் வினவினார்.

அதற்குப் பதிலளித்த திருவாட்டி லோ, மிக மிகக் குறைவான விழுக்காடு அது என்றார். மேலும், ஒவ்வோர் ஆண்டும் அனுமதிக்கப்படும் மொத்த நிரந்தரவாசிகளின் எண்ணிக்கையில் ஜிஐபி முதலீட்டாளர்களின் விகிதம் 1 விழுக்காட்டுக்கும் குறைவு என்றும் அவர் கூறினார்.