இவ்வாண்டின் முதல் பாதியில் கூடுதலான சிங்கப்பூரர்களுக்கு வேலைவாய்ப்பு அமைந்தபோதும் நீண்டகால வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கை தெரிவித்தது. சென்ற ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங் களில் அதிகமான சிங்கப்பூரர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு தேடிக் கொண்டனர். இதில் உள்நாட்டி லேயே வேலை கிடைத்தோரின் எண்ணிக்கை 6,500 ஆனது. சமூக மற்றும் தனிநபர் சேவை கள், நிதி மற்றும் காப்புறுதிச் சேவைகள், தகவல் தொடர்பு, போக்குவரவு, சரக்கு சேமிப்பு போன்ற சேவை சார்ந்த துறைகள் விரிவாக்கம் பெற்றது இந்த எண்ணிக்கையைக் கூட்டியதாக கூறப்பட்டது.
குறைந்தது 25 வாரங்களாக வேலை இல்லாதோரைக் கொண்டு வேலையின்மை விகிதத்தைக் கணக்கிட்டதில், மார்ச் மாதத்தில் இருந்த 0.7 விழுக்காடு ஜூன் மாதத்தில் 0.8ஆக உயர்ந்தது. கடந்த ஈராண்டில் இதே போக்கு இருந்ததாகவும் தெரிவிக்கப் பட்டது. கடந்த ஆண்டின் ஜூன் மாதத்திலிருந்து வேலையின்மை விகிதத்தில் சரிவு இருந்து வந்தது. ஆனால் அதே சமயம், தற்போது ஒட்டுமொத்த வேலை இன்மை விகிதம் மார்ச் மாதத்தில் இருந்த 2.8லிருந்து ஜூன் மாதத்தில் 2.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது.


