வாகன விபத்தில் இரண்டாவது வெளிநாட்டு ஊழியர் பலி

வாகன விபத்தில் இரண்டாவது வெளிநாட்டு ஊழியர் பலி

1 mins read
94df56b8-a858-4c65-a102-da4b36702505
விபத்தில் ஏற்பட்ட காயங்களால் கேரளாவைச் சேர்ந்த 28 வயது திரு சுகுணன் சுதீஷ்மன் மருத்துவமனையில் உயிர் இழந்தார். படம்: வெளிநாட்டு ஊழியர் நிலையம் ஃபேஸ்புக் -

தீவு விரைவுச்சாலை (PIE) ஓரத்தில் நின்றிருந்த 'டிப்பர்' லாரியுடன் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் 33 வயது ஊழியர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மற்றும் ஓர் ஊழியரும் உயிரிழந்துவிட்டார்.

கேரளாவைச் சேர்ந்த 28 வயது திரு சுகுணன் சுதீஷ்மன், தமக்கு ஏற்பட்டிருந்த காயங்களால் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

திரு சுகுணனின் தாயார் சிங்கப்பூரில் வேலை செய்வதாகவும் அவருடன் தொடர்பில் இருந்து தேவையான உதவியை நல்குவதாகவும் வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டது.

இல்லப் பணிப்பெண் வேலையில் உள்ள திரு சுகுணனின் தாயாருடன் 'இட்ஸ்‌ரேனிங்ரேன்கோட்ஸ்' என்ற லாப நோக்கமற்ற அமைப்பின் ஆலோசகர் பேசி வருவதாக அமைப்பின் தொண்டூழியர் ஒருவர் தெரிவித்தார்.

மகன் இறப்பதற்கு முன் வியாழக்கிழமை இரவு தாயார் மருத்துவமனைக்குச் சென்று பார்த்ததாகக் கூறப்படுகிறது.

திரு சுகுணனுக்குத் திருமணமாகி 18 மாதக் குழந்தை ஒன்று உள்ளது என்றும் திரு சுகுணன் உயிரிழந்தது அவரின் மனைவிக்கு இன்னும் தெரியாது என்றும் கூறப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை (ஏப்ரல் 20) நடந்த விபத்தை அடுத்து மருத்துவமனையில் ஐந்து ஊழியர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து உயர் சார்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உட்லண்ட்சில் உள்ள வேலைத் தளத்திற்கு 17 ஊழியர்கள் லாரியில் சென்றுகொண்டிருந்தபோது விபத்து நேர்ந்தது.

36 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.