தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இயந்திரம் மேலே விழுந்ததில் 31 வயது சிங்கப்பூரர் உயிரிழப்பு

2 mins read
11a9aa41-48f8-4a50-8eac-b32bb459b6a8
-

இயந்திரம் தம்மை மோதிய பிறகு அது தம் மேல் விழுந்ததில் 31 வயது சிங்கப்பூர் ஆடவர் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 27) காலை மாண்டார். இந்த ஆண்டு இதுவரை வேலையிடத்தில் நிகழ்ந்த 45வது மரணம் இதுவாகும். பாரந்தூக்கி ஒன்று இயந்திரத்தை நகர்த்திக் கொண்டிருந்தது. அப்போது இயந்திரம் சரிந்து ஊழியர்மீது விழுந்தது.

அந்நபர் ஆர்சிஎம் ரிசோர்சஸ் எனும் ஒட்டுமொத்த வணிக நிறுவனத்தின் ஊழியர் ஆவார். நினைவிழந்த நிலையில் அவர், இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அப்பர் பியர்ஸ் நீர்த்தேக்கம் அருகே, 601 ரைஃபிள் ரேஞ்ச் ரோட்டில் விபத்து நடந்தது. 'எஸ்டி என்ஜினியரிங் அட்வான்ஸ்ட் மெட்டிரியல் என்ஜினியரிங்' நிறுவனம் அந்த இடத்தில் செயல்படுகிறது.

ஊழியர் உயிர் இழந்துவிட்டதாக மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.

பாரந்தூக்கிகளைப் பயன்படுத்தும்போது, தூக்கும் பொருளுக்குக் கீழ் தட்டைக்கம்பிகள் செருகப்பட்டிருப்பதும் வேறு இடத்தில் வைப் பதற்காக அவற்றைத் தூக்கும்போது, பொருள் நிலையாக வைக்கப்பட்டிருப்பதும் முக்கியம் என்று அமைச்சு கூறியது.

"தூக்கும் பாரமான பொருள், தற்செயலாக விழுவதைத் தடுக்க இவற்றைச் செய்ய வேண்டும்," என்று அமைச்சு விவரித்தது.

சென்ற 2021ஆம் ஆண்டு மொத்தமும் 37 விபத்துகள் வேலையிடங்களில் நிகழ்ந்தன. ஆனால் இவ்வாண்டு இதுவரை ஏற்பட்டுள்ள 45 வேலையிட மரணங்கள் அந்த எண்ணிக்கையை மிஞ்சியுள்ளன.

மேலும், 2016க்குப் பிறகு இவ்வாண்டே வேலையிட மரணங்கள் ஆக அதிக எண்ணிக்கையில் நிகழ்ந்துள்ளன. 2016ல் 66 பேர் வேலையிடங்களில் உயிரிழந்தனர்.

இவ்வாண்டு முற்பகுதியில் அதிகமான வேலையிட மரணங்கள் நிகழ்ந்ததை அடுத்து, செப்டம்பர் 1ஆம் தேதி, ஆறு மாதத்துக்கு உயர்விழிப்புநிலை பாதுகாப்பு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

விபத்துக்குப் பிறகு கடுமையான பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது தெரிய வந்தால் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்த தடை விதிக்கப்படலாம்.